பாகிஸ்தான் ஆதரவு பாடல்: சிக்கமகளூரில் 7 பேர் கைது
பாகிஸ்தான் ஆதரவு பாடல்: சிக்கமகளூரில் 7 பேர் கைது
ADDED : ஆக 25, 2026 01:08 AM

சிக்கமகளூரு: திப்பு சுல்தான் 'கட் அவுட்' வைக்கப்பட்ட இடத்தில் பாகிஸ்தான் ஆதரவு பாடல் ஒலிபரப்பான விவகாரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மிலாடி நபியை முன்னிட்டு, சிக்கமகளூரு நகரில் திப்பு சுல்தானுக்கு 40 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டது. இப்பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவான பாடல் ஒலிபரப்பாகும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது; இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படுவோர், தேச விரோத கருத்துகளை முன்வைப்போர் கைது செய்யப்பட வேண்டும் என ஹிந்து அமைப்பினர் கூறினர்.
சிக்கமகளூரு டவுன் போலீசார் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து, எஸ்.பி., ஜிதேந்திர குமார் கூறியதாவது:
இந்த வீடியோ குறித்து, தற்போது தான் தெரிய வந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் 'சிக்கமகளூரு திப்பு பாய்ஸ்' என்ற பக்கத்தில் வீடியோ வெளியானது. வீடியோ வெளியிட்ட நபர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வர்களை கைது செய்ய சிறப்பு குழு அமைத்து உள்ளேன்.
சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகள், மத நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக, சிக்கமகளூரு டவுன் போலீசார் நேற்று மாலை தெரிவித்தனர்.
