'எழுத்தாளர்களை உருவாக்கும் அறிவு மையமாக மாறும்' கடல் தாமரை புத்தக பூங்கா குறித்து பேராசிரியர் நெகிழ்ச்சி
'எழுத்தாளர்களை உருவாக்கும் அறிவு மையமாக மாறும்' கடல் தாமரை புத்தக பூங்கா குறித்து பேராசிரியர் நெகிழ்ச்சி
ADDED : மே 06, 2026 11:56 PM

பெங்களூரு: ''எழுத்தாளர்களை உருவாக்கும் அறிவு மையமாக மாறும்,'' என்று, கடல் தாமரை புத்தக பூங்கா குறித்து, இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலை, தினமலர் அலுவலகத்தில் உள்ள, 'கடல் தாமரை புத்தக பூங்கா நுாலக'த்திற்கு, சிவாஜிநகர் பால்கார தெருவில் வசிக்கும் ஆறுமுகம், 54, நேற்று வந்தார். மைசூரு ரோட்டில் உள்ள ஆர்.வி.சி.இ., இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியரான இவர், புத்தக பூங்காவுக்குள் நுழைந்ததுமே மெய்சிலிர்த்து விட்டார்.
ஹிந்தி புத்தகம் பெங்களூரில் நுாலகத்தில் இத்தனை தமிழ் புத்தகங்களா என கேட்டு மகிழ்ச்சியில் திளைத்தார். 'அந்துமணி பதில்கள்' புத்தகத்தை ஆர்வமாக புரட்டி படித்தார். வரலாறு, தலைவர்கள் தொடர்பானது; ஆன்மிகம், கிரைம் நாவல் புத்தகங்களை ஆர்வமாக படித்தார்.
பின், அவர் கூறியதாவது:
பத்திரிகை அலுவலகத்தில் நுாலகம் அமைத்து, தமிழர்களின் அறிவு பசியை போக்க வாய்ப்பு ஏற்படுத்திய, தினமலர் நிர்வாகத்துக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறேன். நான் நினைத்ததை விட நுாலகம் சூப்பராக உள்ளது. ஒரு சில தமிழ் புத்தகங்கள் மட்டுமே இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இங்கு தமிழ் புத்தகங்கள் குவியலே உள்ளது.
'அப்துல் கலாம்' புத்தகத்தை இங்கு படித்தேன். அவரை பற்றி இன்னும் நிறைய புத்தகங்களை இங்கு வைக்க வேண்டும். அப்துல் கலாமின் புத்தகங்கள், இளம் தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் உயர்ந்த நிலைக்கு எப்படி செல்லலாம் என்பதற்கு, அவரது வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.
பால்யகால நினைவு கன்னட புத்தகங்களையும் இங்கு வைத்து உள்ளீர்கள். இது கன்னடர் - தமிழர் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. ஹிந்தி புத்தகங்களும் இங்கு இடம் பெற வேண்டும் என்பது எனது ஆசை. அனைத்து மொழி புத்தகங்களுக்கும் இருக்கும் போது, இங்கு வருவோர் ஒருவருக்கொருவர் பழகி நட்பு வட்டாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பும் உள்ளது.
திருக்குறள் புத்தகத்தை பார்த்ததும், எனக்கு பால்ய கால நினைவுகள் வந்து விட்டன. திருக்குறளை பள்ளி, நுாலகங்களுக்கு சென்று படித்த, பசுமையான நினைவுகள் கண்முன்பு வந்து செல்கிறது. புத்தகங்களை படிப்பது அறிவை மட்டும் வளர்க்க இல்லை. வாழ்க்கையில் ஒழுக்கத்தை கற்று கொள்ளவும் தான். யாரிடம் எப்படி பேச வேண்டும்; இடத்திற்கு தக்க எப்படி செயல்பட வேண்டும் என்பதை, நமக்கு கற்று கொடுக்கும் ஆசான் புத்தகங்கள். இதுபோன்ற நுாலகங்களை தமிழர்கள் நிச்சயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அறிவு பசியில் இருப்பவர்களுக்கு இந்த இடம் சிறந்த தீர்வு. பல எழுத்தாளர்களை உருவாக்கும் அறிவு மையமாக, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் மாறும். புத்தகங்களை படித்து நல்லதை எடுத்து கொள்வோம்; கெட்ட விஷயங்களை கைவிடுவோம். புத்தகங்களை நாம் பாதுகாத்தால் தான், புத்தகங்கள் நம்மை பாதுகாக்கும். புத்தகங்கள் வெறும் காகிதமாக இருக்கலாம். ஆனால் அது அறிவை பட்டை தீட்டும் சக்தி என்பதை, ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏழு நாட்களும்
பூத்து குலுங்கும்
வாரத்தின் ஏழு நாட்களும் காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 83108 60601, 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
