ADDED : செப் 10, 2026 11:02 PM
பெங்களூரு: நகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் எட்டாவது, 9வது மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களை, இரண்டு நாட்கள் கிராமங்களுக்கு அழைத்து சென்று, கிராமப்புற வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தும் படி, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
நகர் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, கிராமப்புற வாழ்க்கையை அறிமுகம் செய்யும் நோக்கில், கிராமங்களில் வசிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு, 2.46 கோடி ரூபாய் செலவிடப்படும். நகர்ப்புற மாணவர்கள், கிராமங்களுக்கு அழைத்து செல்வதே, திட்டத்தின் நோக்கமாகும்.
நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து பிஎம்ஸ்ரீ மற்றும் கே.பி.எஸ்., பள்ளிகள், 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகள், அரசு பி.யு.சி., கல்லுாரிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களை, கிராமங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். ஒரு இரவு, இரண்டு பகல் அங்கு தங்க வைத்து, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை, மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
விவசாயம், பால் உற்பத்தி, தோட்டக்கலை, கலை, கலாசாரம் உட்பட, கிராமப்புற நடைமுறை குறித்து, அவர்களுக்கு விவரிக்க வேண்டும்.
இவ்வாறு, ஆண்டு தோறும் செப்டம்பர் முதல் டிசம்பருக்குள், மாணவர்களை கிராமங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
