வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளோருக்கு மட்டுமே திட்டங்கள்: சிவகுமார் திட்டவட்டம்
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளோருக்கு மட்டுமே திட்டங்கள்: சிவகுமார் திட்டவட்டம்
ADDED : ஜூன் 20, 2026 03:35 AM

பெங்களூரு: ''வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே, வாக்குறுதி திட்டங்களை வழங்க வேண்டும்,'' என, முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சிவகுமார், வாக்குறுதி திட்டங்கள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்குகிறோம். இதில் பல பயனாளிகள் வங்கியில் கடன் பெற்று உள்ளனர். கிரஹலட்சுமி திட்ட பணம் சென்றதும், அந்த பணம் கடன் தொகையில் வரவு வைக்கப்படுகிறது. பயனாளிகள் வங்கிக்கணக்கை மாற்றுவதால் முறைகேடு ஏற்படுகிறது. இதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரஹலட்சுமி பணம் பயனாளிகள் வங்கிக்கணக்கிற்கு சென்றதை, தொலைபேசியில் அழைத்து பேசி, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நமது மாநிலத்தின் திட்டங்கள், நமது மாநில பயனாளிகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். மற்ற மாநிலத்தினர் பலன் பெறுவதை நிறுத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே, வாக்குறுதி திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தகுதியானவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்பட கூடாது. தகுதியற்றவர்கள் திட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் .
விண்ணப்பங்களை மறு சரிபார்ப்பு செய்வது குறித்து, மூன்று நாட்களுக்குள் அதிகாரிகள் முடிவை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
