ரேணுகாசாமி கொலை வழக்கின் அரசு தரப்பு சாட்சி ‘யூ – டர்ன்’
ரேணுகாசாமி கொலை வழக்கின் அரசு தரப்பு சாட்சி ‘யூ – டர்ன்’
UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 11:06 PM
பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கின், அரசு தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் யு – டர்ன் அடித்துள்ளார். ‘கொலை நடந்த இடத்திற்கு நடிகர் தர்ஷனும், அவரது தோழி பவித்ரா கவுடா வந்ததை நான் பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார்.
நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய, சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, கடந்த 2024 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கின் தொழில்நுட்ப சாட்சிகள், எப்.எஸ்.எல்., அறிக்கை உட்பட பல தகவல்கள் அடிப்படையில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கின் அரசு தரப்பு சாட்சிகளாக, கொலை நடந்த இடத்தின் காவலாளிகள் புனித், கிரண் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
வழக்கின் விசாரணை பெங்களூரு, 59வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடக்கிறது.
விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளிக்க புனித்துக்கு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் வரவில்லை. அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த விசாரணைக்கு புனித் ஆஜரானார். கொலை நடந்த இடத்திற்கு தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட யாரும் வரவில்லை. அவர்களை நான் பார்த்ததும் இல்லை என்று நீதிபதி முன் கூறினார்.
இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதி, நீதிமன்றத்தில் பிரிவு 164ன் கீழ் ரகசிய வாக்குமூலம் அளிக்கும்போது, தர்ஷனையும், பவித்ராவையும் சம்பவ இடத்தில் பார்த்ததாக கூறினீர்களே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு புனித் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து, மனு மீதான அடுத்த விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சி ‘யூ – டர்ன ் ’ அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று நடந்த விசாரணைக்கு, சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜரான தர்ஷன், தனக்கு மீண்டும் முதுகு வலி அதிகரித்து விட்டது. சிகிச்சை அளிக்க, ‘பிசியோ தெரபிஸ்’டை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். சிறை அதிகாரிகளிடம் முறைப்படி மனு அளியுங்கள் என்று நீதிபதி கூறினார்.
