அரசியலமைப்பை பாதுகாக்க முன்னுரிமை: சட்ட பட்டதாரிகளுக்கு தலைமை நீதிபதி அழைப்பு
அரசியலமைப்பை பாதுகாக்க முன்னுரிமை: சட்ட பட்டதாரிகளுக்கு தலைமை நீதிபதி அழைப்பு
UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 09:54 PM
பெங்களூரு: ‘‘அரசியலமைப்பை பாதுகாக்க முன்னுரிமை கொடுங்கள்,’’ என, இளம் சட்ட பட்டதாரிகளுக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய தேசிய சட்ட பள்ளி பல்கலைக்கழகத்தின், 34வது ஆண்டு பட்டமளிப்பு விழா, பெங்களூரு காந்திநகரில் உள்ள ஞானஜோதி அரங்கில் நேற்று நடந்தது.
மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய பின், தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசியதாவது:
சட்ட தொழில் என்பது சட்ட விதிகளை தெரிந்து கொள்வத ற்கும், நீதிமன்றத்தில் வாதிடுவதற்கு மட்டுமல்ல. சரியான காரணங்களுக்காக குரல் கொடுக்கும் தைரியமும், மக்கள் குரல்களுக்கு செவி சாய்க்கும் பணிவும் வேண்டும்.
தொழில்முறை வசதிக்காக நேர்மையை கைவிடக் கூடாது. இந்த தொழில் மீது நீங்கள் காட்டும் நேர்மை தான், மக்கள் மத்தியில் நீண்ட கால நம்பிக்கை, மரியாதையை பெற்று தரும்.
சட்ட பட்டதாரிகள் தனிநபர் சுயாட்சியின் பாதுகாவலர்களாகவும், பொது ஊழியர்களாகவும் செயல்பட வேண்டும். அநீதியை சரி செய்வதிலும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு ஆதரவு
நிகழ்ச்சியில், முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
உலகெங்கிலும் ஜனநாயக நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்ளும் இந்த காலகட்டத்தில், அரசியல் அமைப்பை பாதுகாப்பதற்காக சட்டப்படிப்பு படித்து உள்ள உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
நீங்கள் கேள்வி கேட்பதை ஒரு போதும் நிறுத்தாதீர்கள்; எந்த விஷயத்திலும் சமரசம் செய்யாதீர்கள்; ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதியை உறுதி செய்ய பாடுபடுங்கள்.
அரசியலமைப்பு கோட்பாடுகள், பாடப்புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கி விடாமல், ஆட்சி, கொள்கை உருவாக்கம், பொது வாழ்க்கைக்கும் வழிகாட்ட வேண்டும்.
நீதி துறை சேவை தேர்வுகளுக்காக, சட்ட பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும், இளம் வக்கீல்களுக்கு தொடர் கல்வி வழங்கவும், கர்நாடக அரசு சார்பில் தொழிற்பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும். புத்தொழில் சட்ட மையம் அமைக்கவும் அரசு ஆதரவு தரும். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கொள்கைகள் தான் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ஞானபாரதியில் உள்ள இந்திய தேசிய சட்ட பள்ளி பல்கலைக்கழக வளாகத்தின் தெற்கு பகுதியில் கலையரங்கம், மாணவர் மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
உயர்கல்வி துறை அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி, உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளும் பங்கேற்றனர்.
