பிடதி டவுன்ஷிப்புக்கு எதிராக போராட்டம் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் இன்று பேரணி
பிடதி டவுன்ஷிப்புக்கு எதிராக போராட்டம் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் இன்று பேரணி
ADDED : ஆக 09, 2026 12:05 AM

பெங்களூரு: ''பிடதி டவுன்ஷிப்புக்கு எதிராக இன்று நடக்க உள்ள ம.ஜ.த., பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர்கள் பங்கேற்பர்,'' என, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு தனியார் ஹோட்டலில் நேற்று, பா.ஜ., - ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ., தலைவர்கள் அசோக், சலவாதி நாராயணசாமி, ம.ஜ.த.,வின் மத்திய அமைச்சர் குமாரசாமி பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின் குமாரசாமி அளித்த பேட்டி:
பிடதி டவுன்ஷிப் திட்டத்துக்கு எதிராக ஆக., 9, 10 (இன்று, நாளை) ஆகிய நாட்களில், பைரமங்களாவில் இருந்து கெங்கேரி வரை இரு நாட்கள் பேரணி நடக்கும். பேரணி துவக்க நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து சுதந்திர பூங்காவில் நிறைவு மாநாடு நடக்கும்.
விவசாயிகளுக்கு ஆதரவாக பா.ஜ.,வினர் ஏற்கனவே கூட்டங்கள் நடத்தி உள்ளனர். அத்துடன் சட்டசபை கூட்டத்தொடரில் பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். வறட்சி, விவசாயிகளின் பிரச்னைகள் போன்ற விஷயங்களை கூட்டத்தொடரில் விவாதிப்போம்.
ஒருங்கிணைப்பு குழுவில் குறைபாடு இருக்கக்கூடாது என்று விவாதித்தோம். பெண் விவசாயிகளின் போராட்டத்தை மாநில மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்.
காங்., அரசில் பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கப்படவில்லை. அவர்கள், அடுத்த முதல்வர் யார் என்ற பிரச்னையிலேயே மூன்று ஆண்டுகளை செலவழித்து விட்டனர். இப்போது அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்குவதில் நேரத்தை வீணடிக்கின்றனர்.
பிடதி டவுன்ஷிப் திட்டத்துக்கு எதிராக எங்கள் இரு கட்சிகளும் போராட முடிவு செய்துள்ளன. இதற்கு எதிராக விவசாயிகள், 500 நாட்களாக போராடி வருகின்றனர். தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. அவர்களை மிரட்டியும், அழுத்தம் கொடுத்தும் நிலத்தை வாங்குகின்றனர். இவ்விஷயத்தை சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிப்போம்.
சட்டசபையில் மக்கள் பிரச்னைகளுக்காக குரல் எழுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. வறட்சி விவகாரத்தில் அரசு தோல்வி அடைந்து உள்ளது. இதை சபையில் விவாதிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''காங்கிரஸ் அரசு, ரியல் எஸ்டேட் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாங்கள் ஒருங்கிணைந்து போராடுவோம். நாளை (இன்று) நடக்கும் பேரணியில், நானும், குமாரசாமியும் பங்கேற்போம். நிகில் குமாரசாமியும் கலந்து கொள்வார். இப்பேரணியில் பங்கேற்கும்படி, எங்கள் தொண்டர்களுக்கு அழைப்பு விடுப்போம்,'' என்றார்.
