/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மக்களை திரட்டி போராட்டம் 3 பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
/
மக்களை திரட்டி போராட்டம் 3 பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
மக்களை திரட்டி போராட்டம் 3 பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
மக்களை திரட்டி போராட்டம் 3 பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : ஜூன் 02, 2025 12:28 AM

துமகூரு : ஹேமாவதி ஆற்றின் தண்ணீரை குனிகல், மாகடிக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களை திரட்டி போராட்டம் நடத்தியதுடன், பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக மூன்று பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், இரண்டு மடாதிபதிகள் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
ஹாசன் கொரூரில் ஹேமாவதி அணை உள்ளது. இந்த அணை தண்ணீர், துமகூரு மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
ஆனால் துமகூரின் குனிகல்லுக்கு மட்டும் அணை தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் குப்பியில் இருந்து குனிகல்லுக்கு குழாய் மூலம் தண்ணீரை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
குனிகல்லில் இருந்து ராம்நகரின் மாகடிக்கும் தண்ணீரை கொண்டு செல்ல முயற்சி நடக்கிறது.
இதற்கு துமகூரு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், விவசாய சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
குனிகல், மாகடிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் குப்பியின் சுங்கபுரா கிராமத்தில் போராட்டம் நடந்தது.
போராட்டக்காரர்கள், கால்வாய் இணைப்பு பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம், குழாய்களை தள்ளி மண்ணால் மூடினர்.
சாலையில் டயர்களை போட்டு தீ வைத்து எரித்தனர். அரசு பஸ் காற்றை பிடுங்கி விட்டதுடன், பெங்களூரு - கார்வார் தேசிய நெடுஞ்சாலையில் சேற்றை கொட்டினர். இந்த போராட்டத்தால் குப்பி தாலுகாவில் பல கிராமங்கள் களேபரம் ஆனது.
போராட்டத்தை துாண்டி விட்டதாக துமகூரு மாவட்ட பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்கள் ஜோதி கணேஷ், சுரேஷ் கவுடா, கிருஷ்ணப்பா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தியதுடன், பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக மூன்று எம்.எல்.ஏ.,க்கள், இரண்டு மடாதிபதிகள் மீது துமகூரு ரூரல், குப்பி போலீஸ் நிலையங்களில் 11 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.