/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாமுண்டி கோவிலில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம்
/
சாமுண்டி கோவிலில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம்
சாமுண்டி கோவிலில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம்
சாமுண்டி கோவிலில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம்
ADDED : அக் 12, 2025 03:52 AM
மைசூரு: சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடை கட்டுப்பாட்டை அமல்படுத்த கோரி ஹிந்து கோவில்கள் அமைப்பு சங்கத்தினர், நேற்று போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் உள்ள ஆன்மிக தலங்களில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு பல வரலாற்று சிறப்புகள் உள்ளன. மைசூரு அரண்மனையை ஆட்சி செய்த உடையார் குடும்பத்தினர் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்காத நாளே இல்லை என சொல்லலாம்.
இத்தனை சிறப்பு வாய்ந்த சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு ஆடை கட்டுப்பாடுகள் என எதுவும் இல்லை. இதனால், ஷார்ட்ஸ், ஸ்லீவ் லெஸ் ஆடைகள், டி ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட்டுகள், கவர்ச்சியான ஆடைகளை பெண்கள், ஆண்கள் என இரு பாலரும் அணிந்தபடியே கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கோவிலில் ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, பல காலமாக வலியுறுத்தியும் சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஆடை கட்டுப்பாட்டை அமல்படுத்த கோரியும் ஹிந்து கோவில்கள் அமைப்பு சங்கத்தினர் நேற்று மைசூரு அரண்மனை முன் அமைந்துள்ள கோட்டை வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் முன் பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
மைசூரை ஆளும் சாமுண்டி தேவியின் கோவிலுக்கு ஆடை கட்டுபாடுகள் இல்லாமல் இருப்பது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. எனவே, போராட்டத்திற்கு வந்துவிட்டோம். எங்கள் போராட்டம் மக்களை கஷ்டப்படுத்துவது அல்ல; நடக்கும் விஷயத்தை தெரியப்படுத்துவதற்காக தான்.
உண்மையில் பக்தி இருப்பவர்கள், பாரம்பரிய உடைகளில் வந்தே சாமி தரிசனம் செய்வர். ஆன்மிக தலங்களுக்கு வரும் போது எந்த மாதிரியான உடைகளை அணிந்து வரவேண்டும் என சிலருக்கு தெரிவதில்லை. சுற்றுலா தலத்திற்கு வருவது போல உடையுடன் வருகின்றனர்.
எனவே, மாநில அரசு உடனடியாக ஆடை கட்டுப்பாடு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டும். சாமுண்டி கோவிலில் ஆடை கட்டுப்பாடு குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.