ADDED : ஜூலை 07, 2026 08:54 PM

ராம்நகர்: 'பால் கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்த வேண்டும்' என கோரி, பால் உற்பத்தியாளர்கள் நேற்று, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி, ராம்நகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், பால் உற்பத்தியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, மாடுகளையும் அழைத்து வந்திருந்தனர்.
இந்திய விவசாய சங்க கர்நாடக மாநில அமைப்பு செயலர் புட்டசுவாமி உள்ளிட்டோர் பங்கேற்றார். பாலை தரையில் ஊற்றி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
அவர்கள் கூறியதாவது:
தீவன விலை உயர்வால், பால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இருப்பினும், 1 லிட்டர் பாலுக்கு, கூட்டுறவு அமைப்புகள் 35 ரூபாய் மட்டுமே வழங்குகின்றன. எனவே, பாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்த வேண்டும்.
மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆழ்துளை கிணறுகளில் கூட தண்ணீர் எளிதில் கிடைப்பதில்லை. ராம்நகரை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கால்நடை தீவனத்திற்கு மாநில அரசு சிறப்பு மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் யஷ்வந்த் குருகரிடம், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் மனு அளித்தனர்.
