ADDED : ஜூலை 07, 2026 08:54 PM
பெங்களூரு: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை கண்டித்து, தெருவோர வியாபாரிகள் பெங்களூரு சுதந்திர பூங்காவில் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.
பெங்களூரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள், ஜூன் 30ம் தேதி துவங்கின. இதில், தெருவோர வியாபாரிகளின் பலரது கடைகளும் அகற்றப்பட்டன. இதனால், தெருவோர வியாபாரிகள் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகளின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இவர்களுக்கு வேறு இடங்களில் கடைகள் அமைத்து தரப்படும் என மாநில அரசு உறுதியளித்தது. இருப்பினும், மாற்று இடங்களை தந்த பின்னரே கடைகளை அகற்றுவோம் என விடாப்பிடியாக இருக்கின்றனர்.
இந்நிலையில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக தெருவோர வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். இன்று நடக்கும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தெருவோர வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். பெங்களூரில் தெருவோரங்களில் உள்ள அனைத்து கடைகளையும் மூட அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
மாற்று இடங்களை ஏற்பாடு செய்து கொடுத்த பின்னர், கடைகளை அகற்றுங்கள். திடீரென கடைகளை அகற்றுவதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இவ்விஷயத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
