மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் பஸ் ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்
மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் பஸ் ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்
ADDED : ஜூலை 07, 2026 04:06 AM

கலபுரகி: கே.கே.ஆர்.டி.சி., பஸ்சின் ஹெட்லைட் பழுதடைந்ததால், மொபைல் போன் டார்ச் உதவியுடன், பஸ் ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கலபுரகியில் இருந்து, சிஞ்சோலிக்கு, கே.கே.ஆர்.டி.சி., எனும் கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழக பஸ், பயணியருடன் புறப்பட்டது. வழியில் பஸ்சின் ஹெட்லைட்டுகள், திடீரென பழுதடைந்தன. இருளில் சாலை தெரியவில்லை. அப்போது நடத்துநர், தன் மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தை, பஸ்சின் முன் புற கண்ணாடி வழியாக காண்பித்தார். அந்த வெளிச்சத்தில் ஓட்டுநர் பஸ்சை ஓட்டி சென்றார்.
இதை பயணியர் சிலர், தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'இது அரசின் புதிய ஹெட்லைட் தொழில்நுட்பமா. ஹெட்லைட் பழுதடைந்த பஸ்சை, சாலையில் இறக்கியது யார். பிட்னஸ் சான்றிதழ் அளித்தது யார். ஹெட்லைட்டுகள் சரியில்லாத பஸ்களை இயக்கி, மக்களின் உயிரோடு விளையாடுவது சரியா. தனியார் வாகன ஓட்டிகள் சிறிய தவறு செய்தாலும், அபராதம் விதிக்கும் போக்குவரத்துத்துறை, அரசு பஸ்களின் நிலை குறித்து என்ன சொல்கிறது' என, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
ஹெட்லைட் சரியில்லாத பஸ்களை இயக்குவது, போக்குவரத்து விதிமீறல் மட்டுமல்ல. மிகவும் அபாயமானது. எதிரே வரும் வாகன பயணியர் மீது, பஸ்கள் மோதினால் என்ன செய்வது என்ற பலரும் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, பஸ் டிரைவர் ஆகாஷ், பணிமனை தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் சிவானந்த், பசவராஜ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கே.கே.ஆர்.டி.சி., நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.
