ADDED : ஜூலை 31, 2025 06:18 AM

தேர்தல் முறைகேடு தொடர்பாக காங்., சார்பில்... பெங்களூரில் ராகுல் தலைமையில் நடக்கிறது
பெங்களூரு, ஜூலை 31- லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டும் காங்கிரஸ், இதை கண்டித்து ஆகஸ்ட் 4ல் பெங்களூரில் ராகுல் தலைமையில் போராட்டம் நடத்துகிறது. கடந்த 2024ல் லோக்சபா தேர்தல் நடந்தது. கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக இருந்தும், மொத்தமுள்ள 28 தொகுதிகளில், காங்கிரசால், 9 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது.
இதனால், கட்சி தர்மசங்கடத்துக்கு ஆளானது. தேர்தல் நடந்து ஓராண்டுக்கு மேலாகிறது. இந்நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'லோக்சபா தேர்தலில் பா.ஜ., முறைகேடு செய்து, கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது' என, குற்றம் சாட்டியிருந்தார்.
இவரது குற்றச்சாட்டை, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட பலரும் ஆமோதித்தனர். 'கர்நாடகாவிலும் லோக்சபா தேர்தலில் முறைகேடு நடந்தது. வாக்காளர் பட்டியலில் இருந்து, ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டன. புதியவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன' என, குற்றம் சாட்டினர்.
இவர்களுக்கு பா.ஜ.,வும் பதிலடி கொடுத்தது. 'சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு 135 தொகுதிகள் எப்படி கிடைத்தன என்பதில், எங்களுக்கும் சந்தேகம் உள்ளது' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் சாடினார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் முறைகேட்டை கண்டித்து, ஆகஸ்ட் 4ம் தேதி, பெங்களூரில் ராகுல் தலைமையில் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தல் முறைகேடு குறித்து, ஆகஸ்ட் 4ம் தேதி பெங்களூரில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடக்கவுள்ளது. இதில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்பார். சுதந்திர பூங்காவில் நடக்கும் போராட்டத்தில் உரையாற்றுவார். அதன்பின், அங்கிருந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு சென்று, புகார் அளிக்கப்படும்.
போராட்டம் முடிந்த பின், சுதந்திர பூங்காவில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பாதயாத்திரை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து, முதல்வர் சித்தராமையாவும், மாநில காங்., தலைவர் சிவகுமாரும் முடிவு செய்வர்.
கர்நாடகாவின் லோக்சபா தொகுதி ஒன்றில் ஓட்டுகள் திருடப்பட்டதாக, ராகுல் குற்றம் சாட்டியிருந்தார் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க திட்டமிட்டுள்ளார். போராட்டம் நடக்கும் போது, தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசின் போராட்டம் குறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில், எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியிருப்பதாவது:
கடந்த 24 மாதங்களில், 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது, ராகுல் கர்நாடகாவுக்கு வரவில்லை. இப்போதுதான் அவருக்கு கர்நாடகா நினைவுக்கு வந்ததா. 'கையால் ஆகாதவன், உடலை பிராண்டி கொண்டான்' என கூறுவர். அதுபோன்று தேர்தலில் ஜெயிக்க முடியாத ராகுல், தேர்தல் செயல்பாடு பற்றி குறை கூறகிறார்.
தொடர்ந்து, மூன்று லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெற முடியாமல், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, காங்கிரசை மூழ்கடித்தவர் ராகுல். இப்போது கர்நாடகாவில், தேர்தல் ஆணையத்தை எதிர்த்து பாதயாத்திரை நடத்துகிறாராம். என்ன காரணத்துக்காக பாதயாத்திரை நடத்துகிறார். ஹரியானா, மஹாராஷ்டிரா, டில்லிக்கு பின், பீஹாரிலும் தோல்வி பீதி வாட்டுகிறதோ.
கர்நாடக அரசு மருத்துவமனைகளில், தரமற்ற மருந்துகளால், கர்ப்பிணியர், குழந்தை பெற்ற பெண்கள், பச்சிளம் குழந்தைகள் இறந்த போது, ராகுல் வரவில்லை. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் தொந்தரவால், 50க்கும் மேற்பட்ட ஏழைகள் தற்கொலை செய்து கொண்ட போதும், அவர் வரவில்லை. சின்னசாமி விளையாட்டு அரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி, 11 அப்பாவிகள் இறந்த போதும் வரவில்லை.
பீஹார் தேர்தலில் அடையப் போகும் தோல்விக்கு, இப்போதே காரணம் கண்டுபிடிக்கின்றனர். காங்கிரசாரின் வெட்கங்கெட்ட தன்மையால், கன்னடர்கள் கொதிப்பில் உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.