மூன்று உலர் கழிவு மையங்களை நிர்வகிக்க டெண்டர் கோரும் பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்.,
மூன்று உலர் கழிவு மையங்களை நிர்வகிக்க டெண்டர் கோரும் பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்.,
ADDED : மே 12, 2026 06:56 AM

பெங்களூரு: புதிதாக மூன்று உலர் கழிவு பதப்படுத்தும் மையங்களை அமைப்பதற்கான டெண்டரை, பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
நகரில் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வது மிகவும் சவாலான பணியாக உள்ளது. திடக்கழிவுகளை நிர்வகிக்க, தாராஹுனசே, சுப்பராயனபாளையா, தொட்டபிதரகல்லு ஆகிய மூன்று இடங்களில் புதிய மையங்களை அமைக்க பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., எனும் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் தீர்மானித்தது.
இவற்றில் தாராஹுனசே மையம் மிகப்பெரியது. இங்கு ஒரு நாளைக்கு 826 டன் குப்பையை கையாள முடியும். மற்றவை தினமும், தலா, 200 டன் குப்பையை கையாளும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையங்களை அமைக்க, 125.5 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., இரண்டு முறை வெளியிட்டது. இந்தப் பணிகளை மேற்கொள்ள யாரும் முன்வரவில்லை. தற்போது மூன்றாவது முறையாக டெண்டர் கோர பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., தயாராகி வருகிறது.
முந்தைய டெண்டர்களுடன் ஒப்பிடுகையில் சில மாற்றங்களை பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, சேகரிக்கப்படும் உலர் கழிவுகள் இந்த மையங்களில் தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு அனுப்பப்படும்.
இதன் மூலம் மாநகராட்சியில் சேரும் கழிவுகளின் அளவு குறைக்கப்படுவதுடன், முறையாகக் கழிவு மேலாண்மை செய்யப்படுவதையும் பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., உறுதி செய்ய விரும்புகிறது.
இந்த புதிய மையங்கள் அமைப்பதற்கான இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் டெண்டர் நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு பணிகள் துவங்கும் என, பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, நகரின் ஒட்டுமொத்த கழிவு மேலாண்மை கட்டமைப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
