/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.டி.ஏ., லே - அவுட் மக்கள் பரிதவிப்பு
/
பி.டி.ஏ., லே - அவுட் மக்கள் பரிதவிப்பு
ADDED : மே 03, 2025 11:09 PM
பெங்களூரு: கெம்பே கவுடா லே - அவுட்டில், மின்சாரம், குடிநீர் உட்பட, எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் பொது மக்கள் பரிதவிக்கின்றனர். வீடுகளுக்கு ஆறு மாதங்களாக மின் இணைப்பு ஏற்படுத்தவில்லை.
பெங்களூரின் கெம்பே கவுடா லே - அவுட்டில், ஆயிரக்கணக்கானோர் வீட்டு மனை வாங்கியுள்ளனர். பலர் வீடுகளும் கட்டியுள்ளனர். சாலை இணைப்பு, சாக்கடை வசதி, மின்சாரம், குடிநீர் என, அடிப்படை வசதிகள் இல்லாததால், மனை வாங்கியோர் வீடு கட்ட தயங்குகின்றனர்.
தேவையான வசதிகளை செய்யும்படி, பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர மேம்பாட்டு ஆணையத்திடம் வலியுறுத்தினர்.
பி.டி.ஏ., அதிகாரிகளும் 2024 நவம்பருக்குள், கெம்பே கவுடா லே - அவுட்டில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்வதாக உறுதி அளித்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கெம்பே கவுடா லே - அவுட் பகுதிக்கு, மின்சாரம் வினியோகிக்க ஐந்து துணை மின்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இவற்றில் கொம்மகட்டா துணை மையத்தின் பணிகள் முடிந்து, ஆறு மாதங்களாகியும் மின் இணைப்பு ஏற்படுத்தவில்லை. இதனால் இங்கு வசிக்கும் மக்கள், 10,000 முதல் 15,000 ரூபாய் செலவிட்டு, அருகில் உள்ள கிராமங்கள், லே - அவுட்களில் இருந்து, தற்காலிகமாக மின் இணைப்பு பெறுகின்றனர். துணை மையம் செயல்பட்டால் மட்டுமே, மக்களுக்கு நிரந்தர மின்சாரம் கிடைக்கும்.
இப்பகுதியினர் கூறியதாவது:
கெம்பே கவுடா லே - அவுட்டின், ஒன்பது பிளாக்குகளில், மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் மின் இணைப்பு இல்லை. தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை. இந்த பிளாக்குகளில் பல மனைகளில் வீடு கட்டும் பணி நடக்கிறது. தெரு விளக்கு இல்லாததால், இருள் அடைந்துள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்தும் திருடர்கள், கட்டுமான பணிகளுக்காக வைத்துள்ள சிமென்ட், இரும்பு கம்பிகள், ஸ்டீல் உட்பட, பல பொருட்களை திருடிச் செல்கின்றனர். பொது மக்கள், தொழிலாளர்கள் இருட்டில் நடமாடும் சூழ்நிலை உள்ளது.
மின் இணைப்பு, சாக்கடை வசதி, குடிநீர் என, அனைத்துக்கும் நாங்கள் பணம் கொடுத்துள்ளோம். ஆனால் எங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. தற்காலிக இணைப்பு பெற, பெஸ்காம் சி.சி., சான்றிதழ், என்.ஒ.சி., கேட்கிறது. இந்த சான்றிதழ் வழங்காமல், பி.டி.ஏ., அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.