UPDATED : நவ 29, 2026 12:00 AM
ADDED : நவ 28, 2026 11:36 PM

சிக்கபல்லாபூர்: பூங்கா இடத்தை சட்டவிரோதமாக வீட்டுமனைகள் அமைத்து, விற்பனை செய்த பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி பாக்யலட்சுமி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகா, பன்டம்வாரிபள்ளி கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலம், பூங்காவுக்கும், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த இடத்தில் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி பாக்யலட்சுமி, சட்டவிரோதமாக வீட்டுமனைகள் அமைத்து, பலருக்கும் விற்றுள்ளார்.
இது குறித்து, பாகேபள்ளியை சேர்ந்த வக்கீல், மாவட்ட பஞ்சாயத்தில் புகார் அளித்தார். மாவட்ட பஞ்சாயத்து விசாரணையில், பூங்கா மற்றும் பொது நோக்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, பாக்யலட்சுமி சட்ட விரோதமாக மனைகளாக்கி விற்றது உறுதியானது.
அது மட்டுமின்றி, ஆவணங்களை பரிசீலிக்காமல், 14 சொத்துகளுக்கு இ – பட்டா அளித்திருப்பதும் தெரிந்தது.
நில பரிமாற்றம் செய்யப்படாத, லே – அவுட் வரைபடம் இல்லாத சொத்துகளுக்கும் பட்டா அளித்து இருந்தார்.
இது குறித்து விளக்கம் கேட்டு மாவட்ட பஞ்சாயத்து நோட்டீஸ் அனுப்பிய போது, அவர் அளித்த பதில் திருப்தியாக இல்லை.
எனவே, பாக்யலட்சுமியை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ., நவீன் பட், நேற்று உத்தரவிட்டார்.
