/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விமான கண்காட்சிக்கு பொதுமக்கள் அனுமதி; போக்குவரத்து நெரிசலில் திணறிய பெங்களூரு
/
விமான கண்காட்சிக்கு பொதுமக்கள் அனுமதி; போக்குவரத்து நெரிசலில் திணறிய பெங்களூரு
விமான கண்காட்சிக்கு பொதுமக்கள் அனுமதி; போக்குவரத்து நெரிசலில் திணறிய பெங்களூரு
விமான கண்காட்சிக்கு பொதுமக்கள் அனுமதி; போக்குவரத்து நெரிசலில் திணறிய பெங்களூரு
ADDED : மார் 22, 2025 06:02 AM

எலஹங்கா: பெங்களூரு எலஹங்கா விமான படை தளத்தில், விமான கண்காட்சியை பார்க்க மக்கள் நேற்று குவிந்தனர். பறந்தபடியே சாகசம் செய்த விமானங்களை பார்த்து, மக்கள் மெய்சிலிர்த்து போயினர்.
நமது ராணுவ அமைச்சகம் சார்பில், பெங்களூரு எலஹங்கா விமான படை தளத்தில், ஐந்து நாட்கள் நடக்கும் விமான கண்காட்சி கடந்த 10ம் தேதி துவங்கியது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் துவக்கி வைத்தார். முதல், இரண்டாம், மூன்றாம் நாட்களில் விமான கண்காட்சியை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு, உள்நாட்டு ராணுவ அதிகாரிகள், முக்கியதஸ்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றும், இன்றும் விமான கண்காட்சியை பார்வையிட, பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. விமானங்கள் வானில் பறந்து வர்ணஜாலம் காட்டுவதை பார்த்து, மீண்டும் அதை பார்க்க மாட்டோமா என்று இரண்டு ஆண்டுகளாக ஏக்கத்தில் இருந்த மக்கள், விமான கண்காட்சியில் பங்கேற்க டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.
* அறிவிப்பு
நேற்று காலை 10:00 மணிக்கு விமான கண்காட்சி துவங்கியது. ஆனால் அதற்கு முன்பே மக்கள் கூட்டம், கூட்டமாக எலஹங்கா விமான படை தளத்திற்கு வந்தனர். விமானங்கள் பறக்க ஆரம்பிக்க போகிறது என்று அறிவித்ததும், உற்சாகத்தில் திளைத்தனர். 'ரன் வே'யில் இருந்து விமானங்கள் மேலே பறக்க துவங்கியதும், விமானத்தை பார்த்து மக்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுடன் வந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை தோள் மீது அமர வைத்து விமானங்கள் பறப்பதை காட்டினர். பிள்ளைகள் அடைந்த சந்தோஷத்தை பார்த்து, மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒவ்வொரு விமானமும் பறக்க ஆரம்பிக்கும் முன்பு, அது எந்த விமானம், அதை ஓட்டுபவர் யார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுபற்றி தங்களது பிள்ளைகளிடம், பெற்றோர் ஆர்வமாக கூறினர்.
* 'சொயிங்' சத்தம்
விமானங்கள் வானில் நிகழ்ச்சிய சாகசங்களை பார்த்து, கை தட்டல்களும், விசில்களும் துாள் கிளப்பின. ரன் வேயில் இருந்து மேலே பறக்க துவங்கும் போது, விமானங்கள் எழுப்பிய, 'சொயிங்' சத்தம் காதை கிழிக்கும் அளவுக்கு இருந்தது. விமானங்கள் வானில் நேராக, சாய்ந்து, செங்குத்தாக பறந்தன. இதனை பார்த்து மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சூர்யகிரண் விமானங்கள் வானில் புகை கக்கியபடி சென்றதை பார்த்தும், மோதுவது போல வந்து திரும்பி சென்றதையும் பார்த்து உற்சாகத்தில் திளைத்தனர்.
காலையில், வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. நேரம் செல்ல, செல்ல வெயில் அதிகரிக்க ஆரம்பித்தது. நேரம் செல்ல, செல்ல தலையில் தொப்பி, கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டனர். குடை பிடித்து கொண்டு, விமான படை தளத்தில் வலம் வந்தனர். நீண்ட நேரம் கால் வலிக்க நின்று பார்த்தவர்கள் சோர்வு அடைந்து, நிழலாக உள்ள இடத்தில் சென்று அமர்ந்து கொண்டனர். பிள்ளைகள் மீது வெயில் பட கூடாது என்று, பெற்றோர் துணிகளால் தலையை மூடினர்.
* தண்ணீர் பாட்டில்
போர் விமானங்களை மிக அருகில் சென்று பார்க்கும் வாய்ப்பு, இந்த விமான கண்காட்சியில் மட்டுமே கிடைக்கும் என்பதால், விமானங்கள் முன்பு நின்று புகைப்படம் எடுப்பதிலும் பலரும் ஆர்வம் காட்டினர்.
மொபைல் போனில் சிலர் செல்பி எடுத்தனர். வெயில் காரணமாக சரியாக புகைப்படம் விழாததால், பக்கத்தில் நின்றவர்களிடம், 'எக்ஸ் கியூஸ் மீ', ப்ளீஸ் டேக் ஒன் போட்டோ' என்று கேட்டனர். யாரும் சலித்து கொள்ளவில்லை. ஒரு புகைப்படம் என்ன, பல புகைப்படம் எடுத்து தருகிறோம் என்று கூறினர்.
புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக இருந்தவர்கள், பாதுகாப்பு பணியில் நின்ற போலீஸ்காரர்கள், விமான படையினரும் கூட விடவில்லை. அவர்கள் கையிலும் மொபைல் போன்களை கொடுத்து, தங்களை புகைப்படம் எடுக்க கூறியதுடன், அவர்களுடன் இணைந்தும் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வெயிலால் தாகத்தில் தவித்தவர்களுக்கு, சிறிய பாட்டில் தண்ணீர் வழங்கப்பட்டது. கழிப்பறை வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
* அரங்குகள்
மதியம் 2:00 மணி வரை உள்நாட்டு விமானங்கள் பறந்து கொண்டு இருந்தன. மாலையில் வெளிநாட்டு விமானங்கள் பறக்கும் என்ற அறிவிப்பால், மக்கள் ஸ்டால்களுக்கு சென்று கூல்டிரிங்ஸ், தின்பண்டம், உணவு வாங்கி சாப்பிட்டனர். பின், விமான படை தளத்தில் அமைக்கப்பட்டு இருந்த, அரங்குகளுக்கு சென்றனர்.
அங்கு இருந்த ராணுவ தளவாட பொருட்கள், விமானங்கள், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பெற்றோர், தங்கள் சிறிய வயதில் படித்ததை பிள்ளைகளிடம் எடுத்து கூறினர்.
விமானப்படை தளத்திற்கு தங்களது சொந்த வாகனங்களில் வந்தவர்களால், பல்லாரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான படை தளத்தில் இருந்து 3 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 'இஞ்ச் பை இஞ்ச்' ஆக நகர்த்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
விமான நிலையத்திற்கு சென்றோர், விமானப் படை தளத்தை தாண்டிய பின் தான், நிம்மதி பெருமூச்சு விட்டனர். இன்று விமான கண்காட்சியின் கடைசி நாள் என்பதால், அதிக கூட்டம் வரும் வாய்ப்பு உள்ளது. இதை சமாளிக்க போலீசார் தயாராகி உள்ளனர்.
ராணுவம் பிடிக்கும்
விமான கண்காட்சியை பார்க்க, ஆந்திராவில் இருந்து முதல்முறை வந்து உள்ளேன். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து போர் விமானங்களையும் ஒரே இடத்தில் பார்ப்பது நல்ல அனுபவம். நமது ராணுவத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
- ஹிராமயி, ஐ.டி., ஊழியர், விசாகப்பட்டினம், ஆந்திரா.
சூர்யகிரண் மாஸ்
சென்னையில் இருந்து நண்பர்கள் ஒரு குழுவாக, விமான கண்காட்சியை பார்க்க வந்து உள்ளோம். விமானங்களை பறப்பதை பார்க்கும் போது ஆர்வமாக உள்ளது. சூர்யகிரண் விமானங்கள் மாஸ் காட்டின. அரங்குகளும் அருமையாக உள்ளன.
- சபரி, தரமணி, சென்னை
புதிய அனுபவம்
எனது சொந்த ஊர் சென்னை. சில ஆண்டுகளாக எலஹங்காவில் வசிக்கிறேன். முதல்முறை விமான கண்காட்சியை குடும்பத்துடன் பார்த்து உள்ளேன். புதிய அனுபவமாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து உள்ளனர்.
- ரவிகுமார், ஐ.டி., ஊழியர், எலஹங்கா
சாகசம் சூப்பர்
மனைவி, குழந்தையுடன் விமான கண்காட்சியை பார்ப்பது நல்ல அனுபவம். எனது குழந்தைக்கு விமானங்கள் பறப்பதையும், தரையிறங்கிதையும் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தேன். விமானங்கள் நிகழ்த்திய சாகசங்கள் சூப்பராக இருந்தது.
- குருசரண், ஐ.டி., ஊழியர், ராமமூர்த்தி நகர்.