/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காபி துாள் விலை 'கிடுகிடு' பொதுமக்கள் அதிருப்தி
/
காபி துாள் விலை 'கிடுகிடு' பொதுமக்கள் அதிருப்தி
ADDED : நவ 10, 2025 04:21 AM

பெங்களூரு: குளிர்காலம் துவங்கியதால், காபி துாள் விலை தொடர்ந்து ஏறு முகமாக உள்ளது. கிலோ காபி துாளின் விலை, 1,200 ரூபாய் வரை எட்டியுள்ளது.
பொதுவாக குளிர் காலத்தில், பலரும் சூடாக காபி குடித்து குளிரை போக்கி கொள்வது வழக்கம். காபி துாள் தேவை அதிகரித்துள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, வியாபாரிகள் விலையை அதிகரித்துள்ளனர். 2022ல் 1 கிலோ காபி துாளின் விலை 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை இருந்தது.
ஆனால் தற்போது 1,200 ரூபாயை எட்டியுள்ளது. அடுத்த மாதம் மீண்டும் விலையை 200 ரூபாய் உயர்த்த வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர். காபி துாள் விலை உயர்வால், ஹோட்டல் தொழில் பாதிப்பதாக, ஹோட்டல் உரிமையாளர்கள் வருந்துகின்றனர்.
மற்றொரு பக்கம் பொது மக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒரே ஆண்டில் இரண்டு முறை விலை உயர்த்தினால், எப்படி வாங்குவது. காபி குடிப்பதை மறந்துவிட வேண்டும் என்கின்றனர்.
வியாபாரிகள் கூறிய தாவது:
காபி கொட்டைகள் அதிகம் விளைந்த பிரேசில், வியட்நாமில் இப்போது விளைச்சல் குறைந்துள்ளது. இதற்கு முன் அங்கிருந்து காபி துாள் இறக்குமதி செய்யப்பட்டது. அங்கு விளைச்சல் இல்லாததால், வரத்து குறைந்துள்ளது.
கர்நாடகாவில் மிக அதிகமான மழை பெய்ததால், காபி பூக்கள் உதிர்ந்தன. கொட்டைகள் கிடைக்கவில்லை. காபி கொட்டை விவசாயிகளுக்கு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அவர்களால் பயிரிட முடியவில்லை. இது போன்ற காரணங்களால், காபி துாள் விலையை உயர்த்தியுள்ளோம். அடுத்த மாதம் 150 முதல் 200 ரூபாய் வரை, விலை உயர்த்தப்படும்.
தற்போதைய சூழ்நிலையில், காபி துாள் வியாபாரம் செய்வதே, பெரும் சவாலாக உள்ளது. விலையை உயர்த்துவதை தவிர, வேறு வழியில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

