ADDED : மே 09, 2026 11:38 PM

தாவணகெரே: ராம்புரா கிராமத்தின் அருகில் உள்ள, துங்கபத்ரா ஆற்றில் பெரிய முதலை தென்படுவதால், கிராமத்தினர் பீதியடைந்துள்ளனர்.
தாவணகெரே மாவட்டம், ஹொன்னாளி தாலுகாவில் துங்கபத்ரா ஆறு பாய்கிறது. சில நாட்களாக மழை பெய்ததால், ஆற்றில் அதிகமான நீர் ஓடுகிறது. பக்கத்தில் உள்ள கிராமத்தின் பலரும் இந்த ஆற்றில் குளிப்பது வழக்கம்.
குளிப்பதற்காக, சிலர் ஆற்றில் இறங்கினர். அப்போது பெரிய முதலை, ஆற்றில் தென்பட்டது. இதை கண்டதும் அவர்கள் உஷாராகி, நீரில் இருந்து வெளியே வந்ததால், உயிர் பிழைத்தனர். ஆற்றில் முதலை இருக்கும் தகவலை, கிராமத்தினருக்கு தெரிவித்து குளிக்க, துணி துவைக்க, கால்நடைகளை குளிப்பாட்ட ஆற்றுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரித்தனர்.
இது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த கிராமத்தினர், முதலையை பிடித்து, வேறு இடத்துக்கு கொண்டு செல்லும்படி வலியுறுத்துகின்றனர்.
