/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குறைந்தபட்ச ஊதியத்தொகை வரைவு அறிவிப்பு வெளியீடு
/
குறைந்தபட்ச ஊதியத்தொகை வரைவு அறிவிப்பு வெளியீடு
ADDED : ஏப் 13, 2025 07:19 AM
பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள 81 பட்டியலிடப்பட்ட துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் குறித்த வரைவு அறிவிப்பை, நேற்று முன்தினம் மாநில அரசு வெளியிட்டது.
ஒவ்வொரு துறை ஊழியர்களின் திறனை அடிப்படையாக கொண்டு ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதன்படி, 81 துறைகளில் உள்ள ஊழியர்களின் மாத ஊதியம் குறைந்தபட்சமாக 19,000 ரூபாயும், அதிகபட்சமாக 34,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
துப்புரவுப் பணியாளர்களுக்கு குறைந்த பட்சமாக ஒரு நாளைக்கு 989 ரூபாயும், மாதம் 21,251 ரூபாயும்; மின் ஊழியர்களில், மிக திறமையான எலக்ட்ரீஷியன்களுக்கு மாதம் 34,225 ரூபாயும், திறமையான எலக்ட்ரீஷியன்களுக்கு மாதம் 28,285 ரூபாயும், உதவியாளர்களுக்கு 25,714 ரூபாயும் வழங்கப்படும்.
மூன்று மண்டலங்களில் இரும்பு தொழிற்சாலைகளில் உலோகங்களை உருக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களில், மிகவும் திறமையானவர்களுக்கு மாதம் 28,285 முதல் 34,225 ரூபாய் வரையும், உதவியாளர்களுக்கு மாதம் 21,142 முதல் 25,714 ரூபாய் வரையும் வழங்கப்படும்.
இது போன்று பல துறைகளில் உள்ள மிகவும் திறமையான தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 989 முதல் 1,196 ரூபாய் வரையும், உதவியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 743 முதல் 899 ரூபாய் வரையும் சம்பளமாக வழங்கப்படும்.
இதன் மூலம் நாட்டிலேயே அதிகமான ரூபாயை குறைந்தபட்ச ஊதியமாக வழங்கும் மாநிலமாக கர்நாடகா மாறுகிறது. ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்குவதை உறுதி செய்வதால், ஏ.ஐ.டி.சி.யு., எனும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் வரவேற்றுள்ளது.
ஏற்கனவே, 2022 - 23ம் ஆண்டில், பட்டியலிடப்பட்ட 34 துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் குறித்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது.
அப்போது, ஊதிய தொகை குறைவாக இருப்பதாக கூறி, ஏ.ஐ.டி.சி.யு., கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தது. இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதே ஏ.ஐ.டி.சி.யு., தற்போது வரவேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

