ADDED : செப் 13, 2025 04:46 AM

இனிப்பு, காரம், உருளைகிழங்கு, உளுந்து, கடலை மாவு, காய்கறி என போண்டாவில் பல வகைகள் உள்ளன. மேற்கண்ட போண்டாக்களை நிறைய சாப்பிட்டு இருப்போம். ஆனால் மீனில் கூட போண்டா செய்யலாம். என்ன 'மீனில் போண்டா'வா என்று ஆச்சரியமாக இருக்கலாம். பெரும்பாலோனோர் இந்த பெயரை கூட கேள்விபட்டு இருக்க மாட்டார்கள். புதுச்சேரி கடற்கரை பகுதியில் உள்ள கடைகளில், மீன் போண்டா அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. மீன் போண்டா புதுச்சேரியின் பேமஸ் ஆக உள்ளது. வீட்டில் எப்படி செய்வது என பார்க்கலாம்.
செய்முறை அடுப்பை ஆன் செய்து அதில் இட்லி பாத்திரத்தை வைக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இட்லி தட்டில் நன்கு கழுவிய பாறை மீனை வைத்து வேக வைக்க வேண்டும். இட்லி பாத்திரத்தில் இருந்து ஆவி வந்ததும், அடுப்பை ஆப் செய்து, வேக வைத்த மீனை எடுத்து உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மிளகாய் பவுடர், கரம் மசாலா பவுடர், உப்பு, சீரக பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பஜ்ஜி மாவு போட்டு தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது நன்றாக உருண்டை பிடித்து, அடுப்பை ஆன் செய்து எண்ணெய் சட்டியை வைத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மீன் போண்டா தயார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு, ஒரே மாதிரியான வடை, போண்டா செய்து கொடுப்பதற்கு பதிலாக, மீன் போண்டாவை செய்து கொடுத்து அசத்தலாம். இதனை தயார் செய்ய 15 முதல் 20 நிமிடங்கள் போதுமானது.
- நமது நிருபர் -