/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுத்திகரித்த குடிநீர் வழங்கும் மையங்கள் 'யு.பி.ஐ., பேமென்ட்' வசதி அறிமுகம்
/
சுத்திகரித்த குடிநீர் வழங்கும் மையங்கள் 'யு.பி.ஐ., பேமென்ட்' வசதி அறிமுகம்
சுத்திகரித்த குடிநீர் வழங்கும் மையங்கள் 'யு.பி.ஐ., பேமென்ட்' வசதி அறிமுகம்
சுத்திகரித்த குடிநீர் வழங்கும் மையங்கள் 'யு.பி.ஐ., பேமென்ட்' வசதி அறிமுகம்
ADDED : மே 11, 2025 11:06 PM

பெங்களூரு: பெங்களூரின் சுத்த குடிநீர் மையங்களை தரம் உயர்த்த, குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. தினமும் 24 மணி நேரம் சேவை வழங்குவதுடன், சில்லரை நாணயம் பிரச்னைக்கு தீர்வு காண, யு.பி.ஐ., பேமென்ட் சிஸ்டத்தை செயல்படுத்த தயாராகிறது.
இது குறித்து பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறியதாவது:
பெங்களூரில் பல்வேறு இடங்களில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் நிதியுதவியுடன், 1,214 சுத்த குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை மாநகராட்சி நிர்வகிக்கிறது. வெவ்வேறு நிதியுதவியில் சுத்த குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டதால், இவற்றை நிர்வகிப்பதில் மாநகராட்சிக்கு பிரச்னை ஏற்படுகிறது.
மாநில அரசின் உத்தரவுப்படி, ஏப்ரல் மாதம் முதல் அனைத்து சுத்த குடிநீர் மையங்கள், பெங்களூரு குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 1,153 மையங்கள் குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மீதியுள்ள மையங்கள் விரைவில் ஒப்படைக்கப்படும்.
மின் கட்டண பாக்கி
குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்ட சுத்த குடிநீர் மையங்களில், 200க்கும் மேற்பட்ட மையங்கள், மின் கட்டண பாக்கி, குடிநீர் பற்றாக்குறை உட்பட பல பிரச்னைகளால் மூடப்பட்டன. இது போன்று பெங்களூரின் கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களில் 100க்கும் மேற்பட்ட மையங்களும், பொம்மனஹள்ளி, மஹாதேவபுரா, ஆர்.ஆர்.நகர், எலஹங்கா, தாசரஹள்ளி மண்டலங்களில் 53 மையங்களும் மூடப்பட்டன.
இத்தகைய மையங்களை பழுது பார்க்க வேண்டும், அனைத்து சுத்த குடிநீர் மையங்களை தரம் உயர்த்தும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடு செய்யப்படுகிறது.
மக்கள் அவதி
சுத்த குடிநீர் மையங்கள் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. இங்குள்ள கருவிகளை மாற்ற வேண்டும். இது தொடர்பாக, துணை முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
நகரின் அனைத்து சுத்த குடிநீர் மையங்களில், 5 ரூபாய் நாணயம் போட்டு, 20 லிட்டர் குடிநீர் பெறும் வசதி உள்ளது. ஐந்து ரூபாய் நாணயம் கிடைக்காமல், மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் நோக்கில், யு.பி.ஐ., பேமென்ட் சிஸ்டம் செயல்படுத்த, குடிநீர் வாரியம் தயாராகிறது.
வீடுகளில் நீரை சுத்திகரிக்க முடியாத ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்கள் ஐந்து ரூபாய் கொடுத்து, 20 லிட்டர் குடிநீர் பெறுகின்றனர்.
குடிநீர் மையங்கள் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மட்டும் செயல்படுகின்றன; இரவு மூடப்படுகிறது. வரும் நாட்களில் தினமும் 24 மணி நேரம் செயல்படும் வசதி கொண்டு வரப்படும். இதனால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.