/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தரும் புஷ்பலதா
/
ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தரும் புஷ்பலதா
ADDED : மார் 16, 2026 06:56 AM

- நமது நிருபர் -
கஷ்டத்தை அனுபவித்தவர்களால் மட்டுமே, அடுத்தவரின் கஷ்டத்தை உணர்ந்து கொள்ள முடியும். அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதேபோன்று எண்ணம் கொண்டவர் புஷ்பலதா. இவர் ஆதரவற்றவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கிறார்.
தாவணகெரே நகரில் வசிப்பவர் புஷ்பலதா பவித்ர ராஜ். இவர் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கஷ்டத்தில் வாழ்ந்த இவருக்கு, ஆதரவற்றோர், அபலைகள், மூத்த குடிமக்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்பது, கனவாக இருந்தது. அதன்படி தாவணகெரேவின், மல்லஷெட்டி ஹள்ளி கிராமத்தில் இருந்து, கூப்பிடு துாரத்தில் ஹொசபுல்லாபுரா கிராமத்தில் உள்ள தன் நிலத்தில், 'சாரதா முதியோர் மற்றும் ஆதவற்றோர் இல்லம்' துவங்கினார்.
இந்த இல்லத்தில், ஆதரவற்றோர், முதியோருக்கு அடைக்கலம் தருகிறார். அதற்கு முன் 2018ல், 'கர்நாடக மகளிர் மற்றும் சிறார்கள் நலன் அறக்கட்டளை' என்ற பெயரில், தொண்டு அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் கீழ், புஷ்பலதாவின் சாரதா ஆதரவற்றோர் இல்லம் செயல்படுகிறது.
ஆரம்பத்தில் ஆதரவற்றோர் இல்லம் திறக்க விரும்பிய போது, அரசிடம் நிலம் கேட்டார். ஆனால் பலன் இல்லை. எனவே வாடகை கட்டடத்தில், ஆசிரமம் துவக்கினார். ஆனால் சிலரால் பிரச்னை ஏற்பட்டது. அதன்பின் தன் சொந்த நிலத்திலேயே ஆசிரமத்தை துவக்கி, நடத்தி வருகிறார். இவர் ஆசிரமம் துவக்கி ஒன்பது ஆண்டுகள் கடந்துள்ளன. இங்கு, 80 பேர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு புஷ்பலதா தொண்டு செய்கிறார்.
ஆசிரமத்துக்கு வந்து உதவும்படி, யாரையும் அழைத்தது இல்லை. ஆனால் கல்லுாரி மாணவ - மாணவியர் தாங்களாகவே விரும்பி, ஆசிரமத்துக்கு வந்து, மூத்த குடிமக்களுக்கு தொண்டு செய்கின்றனர். இங்கு ஆதரவற்றோருக்கு இருப்பிடத்துடன், தரமான உணவும் கிடைக்கிறது. நோயால் அவதிப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவருக்கு சேவை செய்ய நேரம் ஒதுக்கும் புஷ்பலதா, மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.
அவர் கூறியதாவது:
ஆதரவற்றோர், அபலைகள், முதியவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பது, என் குறிக்கோளாக இருந்தது. அதன்படி ஆதரவற்றோர் ஆசிரமம் அமைத்தேன். தற்போது 80 பேர் உள்ளனர். இங்கு இறந்தவர்களுக்கு, நாங்களே இறுதி சடங்குகள் செய்கிறோம்.
திருமண மண்டபங்களுக்கு சென்று, மிச்சமாகும் உணவை கொண்டு வருகிறோம். எங்கள் ஆசிரமத்திலேயே, பலரும் திருமண ஆண்டு விழா, பிறந்தநாள் விழா கொண்டாடுவதால், ஆதரவற்றோருக்கு உணவளிக்க உதவியாக உள்ளது. என் நண்பர்கள் கை கொடுத்து உதவுகின்றனர். ஆதரவற்றோருக்கு சேவை செய்வது, மனதுக்கு திருப்தி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

