/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புலியும், பசுவும் ஒன்றாக சுற்றி திரிந்த தலம் புட்டிகே ஸ்ரீசோமநாதேஸ்வரர் கோவில்
/
புலியும், பசுவும் ஒன்றாக சுற்றி திரிந்த தலம் புட்டிகே ஸ்ரீசோமநாதேஸ்வரர் கோவில்
புலியும், பசுவும் ஒன்றாக சுற்றி திரிந்த தலம் புட்டிகே ஸ்ரீசோமநாதேஸ்வரர் கோவில்
புலியும், பசுவும் ஒன்றாக சுற்றி திரிந்த தலம் புட்டிகே ஸ்ரீசோமநாதேஸ்வரர் கோவில்
ADDED : அக் 14, 2025 04:50 AM

சோமநாதேஸ்வரர் கோவில் கட்ட காரணமாக அமைந்தது பசுவும், புலியும் ஒன்றாக நடந்து சென்ற சம்பவம்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
ஆம்... உண்மை தான். தட்சிண கன்னடா மாவட்டம், மூடபித்ரியின் புட்டிகேயில் அமைந்து உள்ளது புட்டிகே சோமநாதேஸ்வரர் கோவில். இவ்வூர் மக்கள் கூற்றுப்படி, 11ம் நுாற்றாண்டில் துளு நாட்டின் முக்கிய அரச குடும்பங்களில் சவுடாக்கள் ஒருவராக இருந்தனர். அவர்கள் முதலில் உல்லாலுக்கு அருகில் உள்ள சோமேஸ்வராவை தான் தங்கள் தலைநகராக கொண்டிருந்தனர்.
ஆச்சரியம் ஒருசமயம் மூடபித்ரிக்கு வந்தபோது, புலியும், பசுவும் ஒன்றாக சுற்றித்திரிவதை பார்த்து ஆச்சரியமடைந்த மன்னர் வரதய்ய தேவராய சவுடா, இங்கு கோவில் கட்ட தீர்மானித்தார். 1177 மே 7ம் தேதி இக்கோவில் கட்ட துவங்கப்பட்டது என்பதற்கு ஆதாரமாக, கல்வெட்டு உள்ளது.
அதுபோன்று, பஞ்சதுாமாவதி சுவாமிக்கும் கோவில் கட்டினார். பின், தனது நாட்டின் தலைநகரை மூடபித்ரியாக மாற்றினார். இக்கோவில்களில் சுவாமிக்கு தினமும் பூஜை செய்வதற்கு உல்லாலில் இருந்து அர்ச்சகர் குழுவினரை வரவழைத்து, நிரந்தரமாக இங்கேயே தங்க ஏற்பாடு செய்தார்.
நிரந்தர குடியேற்றம் அத்துடன், கோவிலை நிர்வாகம் செய்வதற்கு தேவையான நன்கொடையையும் 15ம் நுாற்றாண்டில் எழுதி வைத்தார். 16வது நுாற்றாண்டில் மூடபித்ரியில் அரண்மனை கட்டி, மன்னர் குடும்பத்தினர் இங்கேயே நிரந்தரமாக குடியேறினர்.
மேற்கு திசையை நோக்கி கட்டப்பட்டு உள்ள இக்கோவில், நடுத்தர அளவில் அமைந்து உள்ளது. இக்கோவில் வளாகம் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மன்னர் காலத்திலும் இக்கோவில் சீரமைக்கப்பட்டு வந்தது. கடந்தாண்டு கோவில் மீண்டும் சீரமைக்கப்பட்டு உள்ளது.
கோவில் கோபுரத்துக்கு, 'கரியமல்லா கோபுரம்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. கோபுரத்தில் நுழையும் போது இடது புறத்தில், கரியமல்லா சுவாமி அருள்பாலிக்கிறார்.
சோமநாதேஸ்வரர் இவரை தரிசனம் செய்த பின், கோபுரத்துக்கும் கருவறைக்கும் இடையே 'தீர்த்த மண்டபம்' கட்டப்பட்டு உள்ளது. இங்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. தீர்த்த மண்டபத்தை கடந்து சென்றால், கருவறையில், 11ம் நுாற்றாண்டின் லிங்க வடிவில் சோமநாதேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
அவரை தரிசித்த பின் வெளியே வந்தால், வலது புறத்தில் மஹிசாசுரமர்த்தினி தாயாருக்கு தனி சன்னிதி அமைந்து உள்ளது. இந்த சன்னிதிக்கு வலதுபுறம் முதல்முதற் கடவுளான விநாயகரும், தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். வடமேற்கில் நரசிம்மர் சன்னிதி உள்ளது. மேற்கு நுழைவு வாயில் எதிரே பகைமையை மறந்த நண்பர்களாக மாறிய புலியும், பசுவின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன.
கோவில் பின்புறம் தெப்பக்குளம் அமைந்து உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தெப்ப உத்சவம் நடக்கிறது. அப்போது தெப்பத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் சிவன் - பார்வதி எழுந்தருளுகின்றனர். தெப்பத்தை சுற்றிலும் அகல்விளக்கு ஏற்றப்படும்
- நமது நிருபர் - .