ADDED : ஏப் 06, 2026 04:52 AM

பாலக்காடு: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று பாலக்காடு வருகிறார்.
கேரளாவில் சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு காட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், ஐக்கிய ஜனநாயக கூட்டணி (யு.டி.எப்.) வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 6ம் தேதி (இன்று) பாலக்காடு வருகிறார். மாலை, 3:00 மணியளவில், கோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தை, அவர் துவக்கி வைத்து பேசுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த யு.டி.எப்., வேட்பாளர்கள், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் மாநில அளவிலான முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
ராகுல், ஹெலிகாப்டர் மூலம் மெர்சி கல்லுாரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஹெலிபேடில் வந்து இறங்குவார். அங்கிருந்து காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் கோட்டை மைதானத்திற்கு அவர் அழைத்து வரப்படுவார்.
ராகுல் வருகையை முன்னிட்டு, பாலக்காடு நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
