/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையாவை நீக்க ராகுல் தயக்கம் பிரியங்கா ஆதரவை நாடும் சிவகுமார்
/
சித்தராமையாவை நீக்க ராகுல் தயக்கம் பிரியங்கா ஆதரவை நாடும் சிவகுமார்
சித்தராமையாவை நீக்க ராகுல் தயக்கம் பிரியங்கா ஆதரவை நாடும் சிவகுமார்
சித்தராமையாவை நீக்க ராகுல் தயக்கம் பிரியங்கா ஆதரவை நாடும் சிவகுமார்
ADDED : ஜூலை 16, 2025 08:16 AM

பெங்களூரு : பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவராக இருப்பதால், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்க, ராகுல் தயக்கம் காட்டி வருவதாகவும், இந்த விவகாரத்தில் பிரியங்கா உதவியை, சிவகுமார் நாடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் பதவிக்காக சித்தராமையா, சிவகுமார் இடையே முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் டில்லி சென்ற இருவரும், முதல்வர் பதவிக்காக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.
பீஹார் மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுல் இருப்பதால், இருவராலும் அவரை சந்திக்க முடியவில்லை. ஆனாலும், “நானே ஐந்து ஆண்டுகளும் முதல்வர்,” என, சித்தராமையா அறிவித்தார். ராகுலை சந்திக்க முடியாவிட்டாலும், அவரது சகோதரி பிரியங்காவை சந்தித்தார் சிவகுமார்.
எதிரொலிப்பு
சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்குவதற்கு, மேலிடம் யோசித்து வருகிறது. இதற்கு காரணம், பீஹார் மாநில சட்டசபை தேர்தல் தான். அந்த மாநிலத்தில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. அங்கு எந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஓட்டுகள் முக்கிய காரணியாக உள்ளன.
கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவராக சித்தராமையா சித்தரிக்கப்படுகிறார். ஒருவேளை இவரை இப்போது முதல்வர் பதவியில் இருந்து மாற்றினால், பீஹார் தேர்தலில் அது எதிரொலிக்குமோ, காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படுத்துமோ என காங்கிரஸ் அஞ்சுகிறது. இதனால் சித்தராமையாவை மாற்றும் விஷயத்தில் ராகுல் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோனியா ஆதரவு
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சித்தராமையாவுக்கு, ராகுலின் ஆதரவு அதிகம் உள்ளது. 2023 சட்டசபை தேர்தலுக்கு பின், முதல்வர் பதவிக்காக சிவகுமார் டில்லியில் முகாமிட்டு முயற்சி செய்தபோது, சித்தராமையாவுக்கு ஆதரவாக இருந்தவர் ராகுல். தற்போதும் சித்துவுக்கு ஆதரவாகவே உள்ளார், ராகுல்.
ஆனால் ராகுலின் தாய் சோனியா, சகோதரி பிரியங்கா ஆகிய இருவரும் சிவகுமாருக்கு ஆதரவாக உள்ளனர். சோனியா கூறியதால் தான், துணை முதல்வர் பதவியை சிவகுமார் ஏற்றுக் கொண்டார் என்றும் ஒரு பேச்சு உள்ளது.
இதனால் பிரியங்கா வழியாக சோனியாவின் ஆதரவு பெற்று, முதல்வராகலாம் என்று சிவகுமார் கருதுகிறார். இதனால் இந்த விவகாரத்தில் பிரியங்காவின் ஆதரவை பெற முயற்சி செய்கிறார் சிவகுமார்.