ஹோட்டல்களில் 'ரெய்டு' வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
ஹோட்டல்களில் 'ரெய்டு' வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
ADDED : மார் 18, 2026 05:38 AM
பங்காருபேட்டை: பங்காருபேட்டை, தங்கவயல் பகுதியில், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில், சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்ட, 22 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது மாநிலம் முழுதும், வர்த்தக எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பங்காருபேட்டை, தங்கவயலில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் வர்த்தக சிலிண்டர்களுக்கு பதிலாக, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இரண்டு பேக்கரிகள் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, அவற்றின் உரிமையாளர்கள் வர்த்தக சிலிண்டர்களுக்கு பதிலாக வீட்டு உபயோக சிலிண்டர்களை சமையலுக்கு பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. சிலிண்டர்களை பறிமுதல் செய்த தாசில்தார் சுஜாதா எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்த சோதனையின் போது சில ஓட்டல்கள் சுத்தமாக இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. அங்கிருந்து தண்ணீர் மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
அதேநேரத்தில், வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பங்காருபேட்டையில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் காய்கறிகள் விற்பனையும், அவற்றின் விலையும் குறைந்துள்ளது. முன்னர், 1200 முதல் 1300 ரூபாய் வரை விற்ற ஒரு மூட்டை உருளைக் கிழங்கு, தற்போது, 500 முதல் 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
