/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமார் முதல்வராக ராஜ ஷியாமளா யாகம்
/
சிவகுமார் முதல்வராக ராஜ ஷியாமளா யாகம்
ADDED : நவ 12, 2025 06:38 AM

பெங்களூரு: டி.கே.சிவகுமார் மாநிலத்தின் முதல்வராக வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவரது விசுவாசி ஒருவர், 20 லட்சம் ரூபாய் செலவில் ராஜ ஷியாமளா யாகம் நடத்தினார்.
கர்நாடக துணை முதல்வரான சிவகுமார், முதல்வர் பதவிக்காக பல காலமாக காத்திருக்கிறார். பொதுவாக காங்கிரசில் மாநில தலைவராக இருப்பவரை, முதல்வராக்கும் சம்பிரதாயம் உள்ளது.
எனவே முதல்வராகும் கனவுடன், பல இடையூறுகளுக்கு பின், மாநில தலைவரானவர் சிவகுமார்.
மாநிலத்தை சுற்றி வந்து, கட்சியை பலப்படுத்தி, பா.ஜ., - ம.ஜ.த.,வினரை காங்கிரசுக்கு ஈர்த்து, பெரும்பான்மையுடன் கட்சியை ஆட்சியில் அமர்த்தினார். அதனால், சிவகுமாரே முதல்வராவார் என, ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் சித்தராமையாவுக்கு, இரண்டாவது முறையாக முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், முதல்வர் மாற்றம் நடக்கும் என, ஆளுங்கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இந்த பரபரப்புக்கிடையே சிவகுமார் முதல்வராக வேண்டி, பல்லாரி நகர மேம்பாட்டு ஆணைய தலைவர் ஆஞ்சநேயலு, 20 லட்சம் ரூபாய் செலவிட்டு, ராஜ ஷியாமளா யாகம் நடத்தினார். இவர் சிவகுமாரின் விசுவாசி.
பல்லாரியின் பிரசித்தி பெற்ற அம்ருதேஸ்வரா கோவிலில், நவம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் சிறப்பு யாகம் நடந்துள்ளது.
ராஜ ஷியாமளா தேவியின் அருளை பெற்றால், உயர் பதவிகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானாவின் சந்திரசேகரராவ் உள்ளிட்டோர், ராஜ ஷியாமளா யாகம் நடத்தி, முதல்வர் பதவிக்கு வந்தனர்.
இவர்களுக்கு யாகம் நடத்திக் கொடுத்த, அதே 25 புரோகிதர்களை வரவழைத்து யாகம் நடத்தப்பட்டுள்ளது.
ராஜ ஷியாமளா யாகத்துடன், கணபதி ஹோமம், சண்டிகா யாகம், சுதர்ஷன யாகம், ருத்ர யாகம் ஆகிய யாகங்களும் நடத்தப்பட்டுள்ளன.

