/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராஜண்ணா விவகாரம்; அமைச்சரா, எம்.எல்.ஏ.,வா? சட்டசபையில் காரசார விவாதம்
/
ராஜண்ணா விவகாரம்; அமைச்சரா, எம்.எல்.ஏ.,வா? சட்டசபையில் காரசார விவாதம்
ராஜண்ணா விவகாரம்; அமைச்சரா, எம்.எல்.ஏ.,வா? சட்டசபையில் காரசார விவாதம்
ராஜண்ணா விவகாரம்; அமைச்சரா, எம்.எல்.ஏ.,வா? சட்டசபையில் காரசார விவாதம்
ADDED : ஆக 12, 2025 05:52 AM
பெங்களூரு: சட்டசபையில் அமர்ந்திருந்த ராஜண்ணாவை, அமைச்சர் என்று அழைப்பதா அல்லது எம்.எல்.ஏ., என்று அழைப்பதா என, பா.ஜ., உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
கர்நாடக அரசில், கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ராஜண்ணா, நேற்று காலை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார்.
மதிய உணவு இடைவேளையின்போது, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால், உணவு இடைவேளைக்கு பின், சட்டசபை கூடிய போதும், அவர் வந்து அமர்ந்திருந்தார்.
இதுகுறித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது நடந்த விவாதம்:
* எவ்வளவு கொள்ளை
எதிர்க்கட்சித் தலைவர் அசோக்: ராஜண்ணாவிடம் ராஜினாமா பெற்றது ஏன்? அவர் என்ன முறைகேடு செய்துள்ளார் என்று தெரியப்படுத்துங்கள். எவ்வளவு கொள்ளை அடித்துள்ளார்? அந்த பணம் யார் வீட்டில் வைத்துள்ளார்? தற்போது அவர் இங்கேயே அமர்ந்துள்ளார். இல்லை என்றால், உண்மை பேசியதற்காக அமைச்சர் பதவியில் இருந்து இறக்கப்பட்டாரா? இது பற்றி கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. சித்தராமையாவுக்கு ஆதரவாக தினமும் பேசி வந்தவர் ராஜண்ணா மட்டுமே.
* சபாநாயகர் காதர்: சரி, இங்கு அரசியல் விமர்சனங்கள் தேவையில்லை. பிற கட்சி விவகாரங்கள் பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?
* அசோக்: எந்த காரணத்துக்காக ராஜினாமா செய்தார் என்பதை தெரியப்படுத்துங்கள்.
* சுனில்குமார் - பா.ஜ.: சித்தராமையாவுக்கு ஆதரவாக பேசியதற்காக ராஜினாமா செய்தாரா? அவர் மீது என்ன குற்றச்சாட்டு இருந்தது? உண்மை பேசியதற்காக ராஜினாமா செய்தாரா?
* சுரேஷ்குமார் - பா.ஜ.: சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இதற்கு பதில் அளிக்க வேண்டியது அரசின் கடமை.
* சபாநாயகர்: இது சரியாக உள்ளது.
* அசோக்: சபாநாயகர், சமீபத்தில் தான் ஹஜ் யாத்திரை சென்று வந்துள்ளீர்கள். நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உங்களை 'ஹாஜி' என்று அழைக்க வேண்டும். நீதி, நியாயம் அனைத்தையும் நிலை நாட்ட வேண்டும். ஊடகத்தில் செய்தி வெளியாகி இருப்பதால், நாங்கள் தெளிவுப்படுத்தும்படி கேட்கின்றோம்.
* சபாநாயகர்: ஹாஜி சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் அல்லவா?
* அசோக்: உங்கள் பேச்சை நாங்கள் கேட்கிறோம். ராஜண்ணாவை ராஜினாமா செய்யும்படி நாங்கள் கேட்டோமா?
* அரவிந்த் பெல்லத் - பா.ஜ.: இதற்கு முன்பு அமைச்சராக இருந்த நாகேந்திராவையும் நீக்கினீர்கள். தற்போது, ராஜண்ணாவிடம் ராஜினாமா பெற்றுள்ளீர்கள். இருவரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
* அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல்: ராஜண்ணா மீது எதிர்க்கட்சி தலைவர்கள் அன்பு, அக்கறையை காண்பித்துள்ளனர். திடீரென அரசு பதில் அளிக்கும்படி கேட்பது சரியில்லை. விவாதம் தொடர்ந்து நடத்துவது தேவையற்றது. முதல்வர் பதில் அளிப்பார். ஊடகத்தில் வந்திருப்பதால், விவாதிப்பது சரியில்லை.
* சுரேஷ்குமார்: ஊடகத்தில் வந்திருப்பதால், விவாதிப்பது சரியில்லை என்று கூறுவது சரியில்லை. வேறு செய்தி வந்திருப்பதால், அரசு பதில் அளித்திருக்கும். சட்டத்துறை அமைச்சராக இருக்கும் ஹெச்.கே.பாட்டீலோ அல்லது ராஜண்ணாவோ பதில் அளிக்கட்டும். அவர், அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு இங்கு அமர்ந்துள்ளாரா அல்லது அமைச்சராக அமர்ந்திருக்கிறாரா என்பதை கூறட்டும்.
* ஹெச்.கே.பாட்டீல்: சட்டசபையில் முதல்வர் இல்லாதபோது, இந்த விஷயம் பேசுவது சரியில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அதன் பின், கூட்டுறவுத் துறைக்கு சம்பந்தப்பட்ட சில கேள்விகளுக்கு, ராஜண்ணா சார்பில், ஹெச்.கே.பாட்டீல் பதில் அளித்தார். இதற்கு ஆக்ரோஷமடைந்த எதிர்க்கட்சியினர், ராஜண்ணாவை அமைச்சர் என்று அழைப்பதா, இல்லை எம்.எல்.ஏ., என்று அழைப்பதா என கேள்வி எழுப்பினர்.
***