ADDED : நவ 22, 2025 04:57 AM

மாலை நேரம் டீயுடன், என்ன சாப்பிடலாம் என யோசிக்கிறீர்களா? 'ராஜஸ்தான் மட்ரி' செய்யுங்கள். மாறுபட்ட சுவையுடன் இருக்கும். உங்கள் வீட்டு குட்டீஸ்களும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
l மைதா மாவு - 250 கிராம்
l கோதுமை மாவு - 60 கிராம்
l நெய் - 3 ஸ்பூன்
l ஓமம் - 2 ஸ்பூன்
l மிளகு துாள் - 2 ஸ்பூன்
l கஸ்துாரி மேத்தி - 2 ஸ்பூன்
l சீரகம் - 1 ஸ்பூன்
l பெருங்காயம் - சிறிய துண்டு
l சமையல் சோடா - ஒரு சிட்டிகை
l உப்பு - தேவையான அளவு
l எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் நெய்யை கிண்ணத்தில் போட்டு சூடாக்கி வைக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, மேற்கூறிய அனைத்து மசாலா பொருட்கள், கஸ்துாரி மேத்தி, சமையல் சோடா, ருசிக்கு தேவையான உப்பு போட்டு, அதன் மீது சூடாக்கி வைத்துள்ள நெய்யை ஊற்றி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கையால் மிருதுவாக பிசையவும். பூரி மாவு போன்று மென்மையாக இருக்க வேண்டும். இதை அரைமணி நேரம், துணியால் மூடி வைக்கவும்.
அதன்பின் வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள மாவை சிறு, சிறு உருண்டை உருட்டி, தட்டை போன்று வட்டமாக தட்டி, அதை ஸ்போர்க்கால் குத்தி, எண்ணெயில் போடவும்.
உட்புறம் நன்றாக வேக வேண்டும் என்பதால், அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்த பின், எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்க வேண்டும். ராஜஸ்தான் மட்ரி ரெடி; எண்ணெய் வடிந்த பின், டீயுடன் சேர்த்து சாப்பிடுங்கள். குட்டீஸ்களும் விரும்பி சாப்பிடுவர்
- நமது நிருபர் - .

