பெட்ரோல் குண்டை வெடிக்க செய்து 'ரீல்ஸ்' வீடியோ எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார் ரஜத்
பெட்ரோல் குண்டை வெடிக்க செய்து 'ரீல்ஸ்' வீடியோ எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார் ரஜத்
ADDED : ஏப் 29, 2026 01:34 AM

பெங்களூரு: பெட்ரோல் குண்டை வெடிக்கச் செய்து, ரீல்ஸ் வீடியோ எடுத்த பிக்பாஸ் பிரபலம் ரஜத், எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார்.
கன்னட பிக்பாஸ், 11 வது சீசனில், 2வது வெற்றியாளராக தேர்வானவர் ரஜத். இவர், ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இன்ஸ்டாகிராமில் ரஜத் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
பை க் முன் நிற்கும் ரஜத், பைக்கில் இருந்து சில அடி துாரத்தில் பாட்டிலில் அடைக்கப்பட்டு இருந்த, பெட்ரோல் குண்டு வெடித்து தீ பிளம்பு ஏற்படும் போது, கூலாக நடந்து வருவது போன்று, அந்த வீடியோ காட்சிகள் இருந்தன.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பெட்ரோல் குண்டை வெடிக்க செய்து, பொது அமைதிக்கு தீங்கு ஏற்படுத்தியதாக, ரஜத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று, சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து பதிவிட்டனர்.
இந்நிலையில், நேற்று வீடியோ ஒன்றை ரஜத் வெளியிட்டார். அதில், கூறியுள்ளதாவது:
பைக் புரோமோஷன் செய்வதற்காக எடுக்கப்பட்ட வீடியோ அது. யாருக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கம் எனக்கு துளியும் இல்லை. அந்த வீடியோ கனகபுரா சாலையில், இரவில் யாரும் வராத நேரத்தில் எடுக்கப்பட்டது.
வீடியோவை எடுக்கும் முன், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் அனுமதி கேட்டு இருந்தேன்.
அந்த வீடியோவால் யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை. ஒருவேளை அந்த வீடியோ யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இன்ஸ்டாகிராமில் இருந்து வீடியோவை நீக்கி விட்டேன். இந்த பிரச்னையை, இத்துடன் விட்டு விடலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரஜத் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது இது மூன்றாவது முறை. பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த அவர், சக பிக்பாஸ் போட்டியாளர் வினயுடன் சேர்ந்து, அரிவாளை வைத்து வீடியோவை எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
ஆயுதங்களை பயன்படுத்திய வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
மைசூரில் உள்ள பாரம்பரிய கட்டடம் முன், சிகரெட் புகைப்பது போன்று, ரஜத் வெளியிட்ட வீடியோவும் சர்ச்சையில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
