மெட்ரோ நிலையங்களுக்கு புதிய பெயர் நிர்வாகத்திற்கு ராமலிங்க ரெட்டி கடிதம்
மெட்ரோ நிலையங்களுக்கு புதிய பெயர் நிர்வாகத்திற்கு ராமலிங்க ரெட்டி கடிதம்
ADDED : செப் 12, 2026 11:47 PM

பெங்களூரு: பி.டி.எம்., லே - அவுட் தொகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, வேறு பெயர் சூட்டும்படி, மெட்ரோ நிர்வாகத்துக்கு, வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு பி.டி.எம்., லே - அவுட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி. இவர், மெட்ரோ நிர்வாக இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
என் தொகுதியான பி.டி.எம்., லே - அவுட் சட்டசபை தொகுதியில் இயங்கி வரும் அல்லது கட்டுமானத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர், அவை அமைந்து உள்ள உள்ளூர் பகுதியின் பெயர், வரலாறு, புவியியல் முக்கியத்துவம், பொதுமக்களின் பொதுவான கருத்துகளை கருத்தில் கொண்டு, முறையாக மாற்ற வேண்டும்.
சில மெட்ரோ நிலையங்களின் தற்போதைய பெயர்கள், அந்த நிலையத்தின் சரியான இருப்பிடத்தையோ அல்லது அப்பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமான உள்ளூர் பெயரையோ பிரதிபலிக்கவில்லை. இதனால், நிலையத்தின் இருப்பிடத்தை கண்டறிவதில் பொதுமக்களுக்கு சில நேரங்களில் குழப்பம் ஏற்படுகிறது.
எனவே, மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயரை இறுதி செய்யும்போது, நிலையம் அமைந்து உள்ள உள்ளூர் பகுதியின் முக்கியத்துவம், உள்ளூர் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர், அப்பகுதியின் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவம், நிலையத்தை பயணியர் எளிதில் அடையாளம் காண உதவும் வகையில் சூட்ட வேண்டும்.
அதன்படி, தற்போது ஜே.பி., நகர் 4வது கட்ட மெட்ரோ ரயில் நிலையம் என்று அழைக்கப்படும் நிலையத்திற்கு, என்.எஸ்.பாளையா மெட்ரோ நிலையம் என்றும்; தாவரகெரே மெட்ரோ நிலையத்தை எஸ்.ஜி., பாளையா என்றும்; டெய்ரி சதுக்கத்தை, லக்கசந்திரா மெட்ரோ நிலையம் என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
உள்ளூர் மக்கள், பொதுமக்கள், உள்ளூர் தலைவர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின், மேலே குறிப்பிட்டுள்ளபடி மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயரை மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
