/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக் டாக்சி விவகாரம் ராமலிங்க ரெட்டி விளக்கம்
/
பைக் டாக்சி விவகாரம் ராமலிங்க ரெட்டி விளக்கம்
ADDED : ஆக 14, 2025 04:01 AM

பெங்களூரு: ''மாநிலத்தில் பைக் டாக்சி சேவைகளை மீண்டும் துவக்குவது குறித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை, மாநில அரசு பின்பற்றும்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் அருண் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது:
பைக் டாக்சி சேவையை தடை செய்து, மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளனர். விரைவில் இறுதி தீர்ப்பு வெளியாகும்; நீதிமன்ற உத்தரவை நாங்கள் ஏற்போம்.
பைக் டாக்சி சேவைகளுக்கு, அனுமதி அளிப்பது குறித்து, அரசு தலைமை செயலர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மின்சாரத்தால் இயங்கும் பைக் டாக்சிகளுக்கு, அனுமதி அளித்தோம். அதன்பின் பெட்ரோல் பைக்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு ஆட்டோ மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .
மக்களின் நன்மையை கருதி, பைக் டாக்சிக்கு அரசு தடை விதித்தது. எங்கள் உத்தரவை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இதற்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருவேளை இதற்கு அனுமதி அளிக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டால், பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.