விஜயேந்திராவை அலட்சியப்படுத்தக்கூடாது பா.ஜ.,வுக்கு ரம்பாபுரி சுவாமிகள் எச்சரிக்கை
விஜயேந்திராவை அலட்சியப்படுத்தக்கூடாது பா.ஜ.,வுக்கு ரம்பாபுரி சுவாமிகள் எச்சரிக்கை
ADDED : ஜூலை 02, 2026 11:07 PM

தாவணகெரே: ''மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை அலட்சியம் செய்தால், கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும், என, ரம்பாபுரி மடாதிபதி வீர சோமேஸ்வர சிவாச்சார்ய சுவாமிகள் எச்சரித்துள்ளார்.
தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில், முதன் முறையாக பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்தியதில், எடியூரப்பாவின் பங்கு முக்கியமானது. வெறும் இரண்டு எம்.எல்.ஏ.,க்களுடன் இருந்த கட்சியின் பலத்தை அதிகரிக்க செய்தவர்.
இத்தகைய செல்வாக்கு மிக்க தலைவரையும், அவரது மகன் விஜயேந்திராவையும் ஓரங்கட்டி, லிங்காயத் சமுதாயத்தை அலட்சியப்படுத்தினால், கட்சிக்கு தான் நஷ்டம்.
எடியூரப்பா நான்கு முறை முதல்வராக இருந்தும், அவரை முழுமையாக ஆட்சி நடத்த, சொந்த கட்சியினரே விடவில்லை. அவர் முதல்வராக இருந்த போது, காலை வாரினர். இப்போது, மாநில தலைவராக இருக்கும் விஜயேந்திராவை, பதவியில் இருந்து இறக்க சதி செய்கின்றனர். இதற்கு முன், லிங்காயத் சமுதாயத்தை அலட்சியப்படுத்திய போது, கட்சி என்ன விளைவுகளை சந்தித்ததோ, அதுபோன்ற விளைவுகளை இப்போதும் சந்திக்கும்.
பா.ஜ.,வில் கோஷ்டிகள் இல்லாமல், ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சிகள் லாபமடையும். மத்திய தலைவர்கள் உடனடியாக தலையிட்டு, கட்சிக்குள் உள்ள குழப்பங்களை சரி செய்ய வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள், பக்தி உணர்வுடன் நிதி வழங்கினர். சில நபர்கள் குறுக்கு வழியில் பணத்தை, தவறாக பயன்படுத்தியது வருத்தம் அளிக்கிறது.
இது போன்ற புனிதமான இடத்தில், ஊழல் நடக்க கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை தண்டிக்க வேண்டும். கொள்ளையடித்த பணத்தை வசூலித்து, கோவில் கணக்கில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
