விவசாய பிரிவு பொது செயலர் பா.ஜ.,விலிருந்து நீக்கம்
விவசாய பிரிவு பொது செயலர் பா.ஜ.,விலிருந்து நீக்கம்
ADDED : ஜூலை 02, 2026 11:09 PM

பெங்களூரு: கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, கர்நாடக பா.ஜ., விவசாய பிரிவு பொது செயலர் சதீஷ் கடதனமலே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக பா.ஜ., விவசாய பிரிவு பொது செயலராக பணியாற்றியவர் சதீஷ் கடதனமலே. சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகரின் ஆதரவாளராக இருந்தார்.
சமீபத்தில் சுதாகருக்கும், எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத்துக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. அப்போது சுதாகருக்கு ஆதரவாக விஸ்வநாத் மற்றும் கட்சி தலைவர்கள் சிலரை சதீஷ் விமர்சித்து பேசினார். கட்சிக்கு எதிராகவும் சில கருத்துகளை வெளியிட்டார்.
மேலும், முதல்வர் சிவகுமாரின் தம்பியும், பாமுல் தலைவருமான சுரேஷுடன் நெருக்கமாக பழகினார். இதனால் சதீஷை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் லிங்கராஜ் பாட்டீலுக்கு, கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.
கட்சிக்கு எதிராக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி, சதீஷுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. அவர் அளித்த பதிலில் திருப்தி இல்லாததால், அவரை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கி, லிங்கராஜ் பாட்டீல் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
பா.ஜ.,வுக்கு எதிராக செயல்பட்டதாக, கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ், இரண்டு நாட்களுக்கு முன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது சதீஷ் நீக்கப்பட்டுள்ளார்.
