கார் டிரைவர் தற்கொலை வழக்கில் திருப்பம்: எம்.எல்.ஏ., சந்துரு லமானி மீது குற்றச்சாட்டு
கார் டிரைவர் தற்கொலை வழக்கில் திருப்பம்: எம்.எல்.ஏ., சந்துரு லமானி மீது குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 02, 2026 11:10 PM

கதக்: சிரஹட்டி பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானி கார் டிரைவர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, எம்.எல்.ஏ.,வின் மீது, டிரைவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
கதக்கின் சிரஹட்டி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானி, 36. இவரிடம் கார் டிரைவராக வேலை செய்த சுனில் லமானி, 37, கடந்த ஆண்டு ஜனவரி 9 ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் தற்கொலை செய்ததாக, லட்சுமேஸ்வர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவானது.
இந்நிலையில், சுனில் லமானியின் குடும்பத்தினர் நேற்று கூறியதாவது:
சுனில் லமானி மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவர் இறந்த போது, கழுத்து பகுதியில் ரத்த காயம் இருந்தது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் எங்கள் கைக்கு கிடைக்கவில்லை.
எம்.எல்.ஏ., சந்துரு லமானி செய்த முறைகேடுகள் பற்றி சுனில் லமானிக்கு தெரிந்து இருந்தது. அவர் வெளியே சொல்லி விடுவார் என்ற பயத்தில் அவரை கழுத்தை நெரித்து கொன்று, உடலை துாக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. சுனிலுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை; எம்.எல்.ஏ.,விடம் இருந்து அவருக்கு மிரட்டல் வந்தது.
சுனில் மரணத்திற்கான காரணம் தெரிய வேண்டும் என்று நாங்கள் கேட்ட போது, லட்சுமேஸ்வர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., எங்களை மிரட்டினார். வழக்கின் உண்மையை கண்டறிய எஸ்.ஐ.டி., விசாரணைக்கு, அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கான்ட்ராக்டரிடம் ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, சந்துரு லமானியை, கடந்த பிப்ரவரி மாதம் 21 ம் தேதி லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்திருந்தனர். தற்போது அவர் ஜாமினில் வெளியே உள்ள நிலையில், அவரது கார் டிரைவரின் மரண வழக்கால் அவருக்கு மீண்டும் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
