ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை மாற்ற வேண்டும்: மேலிடத்துக்கு காங்., மூத்த தலைவர்கள் நெருக்கடி
ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை மாற்ற வேண்டும்: மேலிடத்துக்கு காங்., மூத்த தலைவர்கள் நெருக்கடி
UPDATED : அக் 26, 2026 12:00 AM
ADDED : அக் 25, 2026 10:54 PM
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது இல்லை. அவரை மாற்றும்படி மூத்த தலைவர்கள், காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
பல ஆண்டுகளாக கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பதவி வகிக்கிறார்.
இவர் மீது இதுவரை எந்த புகாரும், விவாதமும் இருந்தது இல்லை. கடந்த, 2023ல் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததில், இவரது பங்களிப்பும் இருந்தது.
தலைவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்படும் போது, உட்கட்சி பூசல் ஏற்பட்டால் உடனடியாக கர்நாடகாவுக்கு வந்து, சரி செய்வார்.
ஆனால், இப்போது சுர்ஜேவாலா மீது, மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளராக, பதவி ஏற்ற ஆரம்ப நாட்களில், சுர்ஜேவாலாவிடம் இருந்த உற்சாகம், இப்போது இல்லை. கர்நாடகாவை அவர் மறந்துவிட்டார். அரசுக்கும், கட்சிக்கும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதில், ஆர்வம் காட்டுவது இல்லை. மாநிலத்தின் அரசியல் குழப்பங்கள் பற்றியும் பொருட்படுத்துவது இல்லை.
கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக, குஜராத் பொறுப்பு கிடைத்த பின், கர்நாடகாவை மறந்துவிட்டார்.
கட்சி ஆட்சிக்கு வந்து, இத்தனை ஆண்டுகளாகியும், வாரியங்களின் இயக்குனர்களை அவர் நியமிக்கவில்லை.
சமீப நாட்களாக, கர்நாடக அரசியலில், ‘ஸ்டிங் ஆப்பரேஷன்’ சலசலப்பை ஏற்படுத்துகிறது. இது கட்சியின் இமேஜுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரி செய்வதிலும், சுர்ஜேவாலா அக்கறை காட்டவில்லை. கட்சி மற்றும் அரசை ஒரே பாதையில் கொண்டு செல்லவில்லை.
எனவே இவரை மாற்றி விட்டு, புதிய பொறுப்பாளரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு பலரும், காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
