UPDATED : நவ 20, 2026 12:00 AM
ADDED : நவ 19, 2026 07:48 PM

- நமது நிருபர் -: உத்தரகன்னடா மாவட்டம், முந்த்கோட் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா, 17. பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளியான இவருக்கு, சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம். இவர், கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாவிட்டாலும் ஸ்கோர், விக்கெட் போன்றவற்றை வானொலியில் கேட்டு அறிந்து கொள்வார். எப்படியாவது கிரிக்கெட் விளையாட வேண்டும் என ஆசைப்பட்டார்.
மாவட்ட பார்வையற்றோருக்கான கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்தார். பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்திற்குள், மணி ஒன்று சிறியதாக இருக்கும். மணியின் ஓசையை வைத்தே பந்து வருவதை கணிக்க முடியும். இது, ரஞ்சிதாவுக்கு மிகவும் பிடித்தது. அவருக்கு கிரிக்கெட் மீதிருந்த ஆர்வம், அனைத்தையும் எளிதில் கற்க வைத்தது.
மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால் தேசிய கிரிக்கெட்டிலும் ரஞ்சிதாவின் பெயர் பேசப்பட்டது.
பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட்டில், இந்தியா - நேபாளம் அணிகளுக்கு இடையேயான டி - 20 போட்டி, டிசம்பர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஹரியானாவில் நடக்க உள்ளது. இந்திய அணியின் சார்பாக 17 வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இதில், ரஞ்சிதாவின் பெயரும் இடம்பெற்று உள்ளது. இதனால் ரஞ்சிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
