காந்தி ஜெயந்தி கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த
காந்தி ஜெயந்தி கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 07:52 PM

– நமது நிருபர் –
கா ந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரசு பள்ளிகளுக்கு இடையே நடந்த கட்டுரை போட்டியில், மாணவி ஸ்ருஷ்டி, மாநிலத்தில் முதல் இடம் பிடித்து, சாதனை செய்துள்ளார்.
மகாத்மா காந்தியின், 157வது ஜெயந்தியை சிறப்பிக்கும் வகையில், கர்நாடக செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை சார்பில், கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. மேல்நிலைப்பள்ளி, பி.யு.சி., பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு பிரிவுகளில், தனித்தனியாக மாநில அளவில் இந்த போட்டி நடந்தது. லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
10ம் வகுப்பு மாணவி
இந்த போட்டியில் பெலகாவியின் மச்சே கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ருஷ்டி திகடி, மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்தார்.
இத்தனை மாணவர்களுக்கு இடையே, தன் அழகான கையெழுத்து, சிறந்த கருத்துகளுடன் கட்டுரை எழுதி, அனைவரையும் கவர்ந்த ஸ்ருஷ்டி, முதலிடத்தை பிடித்தார். இதனால் அவரது பெற்றோரும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாணவிக்கு முதல் பரிசாக, 31ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
வறுமையான குடும்பத்தை சேர்ந்த ஸ்ருஷ்டிக்கு, வரும் காலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகும் கனவு உள்ளது. கனவு வெறும் கனவாக நின்று விடாமல், அதை நனவாக்க இப்போதிருந்தே தன்னை தயார்படுத்துகிறார். வறுமை, பொருளாதார நெருக்கடி யாருடைய திறமையையும் கட்டிப்போடாது என்பதற்கு, இவரே சிறந்த உதாரணம்.
மாணவி ஸ்ருஷ்டி கூறியதாவது:
கட்டுரை போட்டியில், முதல் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில் மகாத்மா காந்தியை பற்றி, எனக்கு அதிகமான தகவல்கள் தெரியவில்லை. கட்டுரை போட்டியில் பங்கேற்ற பின், அதிகமாக தெரிந்து கொண்டேன். அவரது எளிமை, கொள்கைகள், அஹிம்சையை வாழ்க்கையில் கடைபிடித்தார். இவை, உலகுக்கே துாண்டுதலாக இருக்கும்.
வல்லரசு இந்தியா
காந்தி இந்தியாவுக்கு மட்டுமின்றி, இந்த உலகத்துக்கே ஹீரோ என, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியிருந்தார். இன்று, பல இடங்களில் ஊழல், மத கலவரம், ஜாதி மோதல் நடக்கிறது. இத்தகைய காலகட்டத்தில், காந்தியின் கொள்கைகளை பின் பற்றுவது அவசியம்.
குறிப்பாக, இன்றைய இளம் தலைமுறையினர், காந்தியின் கொள்கைகளை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி, சாதனை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா வல்லரசாக முடியும்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்ற, என் குறிக்கோளுக்கு நமது மாவட்ட கலெக்டர் மஹாந்தேஷ் பீளகி துாண்டுதலாக உள்ளார். அவர் பல கஷ்டங்களை கடந்து, படித்து மாவட்ட கலெக்டரானார். என் தாயும் கூட நிறுவனத்தில் வேலை செய்து, என்னை படிக்க வைக்கிறார். எங்களுக்கு சொந்த வீடு இல்லை. என் தாய் பணிக்கு சென்றால் மட்டுமே, எங்கள் வயிறு நிரம்பும்.
இதுபோன்ற நிலையிலும், எனக்கு ஐ.ஏ.எஸ்., கனவு உள்ளது. மாவட்ட கலெக்டரானால் என்னை போன்ற ஏழை, எளிய மக்களுக்கு உதவலாம். சமூக தொண்டு செய்யலாம். சிவப்பு சைரன் வைத்த காரில் செல்லலாம். முன்னேயும், பின்னேயும் கன்மேன் பாதுகாப்பு என, பல கவுரவம் கிடைக்கும். எனவே இப்போதிருந்தே யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு, என்னை தயார்படுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
என் மகள்கள் உயர்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்பது என் ஆசை. எனவே உழைத்து, அவர்களை படிக்க வைக்கிறேன். மூத்த மகள் ஷ்ரேயா, உடுப்பியில் கலை பிரிவில் பட்டப்படிப்பு படிக்கிறார். இரண்டாவது மகள் ஸ்ருஷ்டி, பத்தாம் வகுப்பு படிக்கிறார். பிள்ளைகளுக்கு நாம் சொத்து சேர்க்க வேண்டியது இல்லை. அவர்களுக்கு சிறப்பான கல்வியை தருவதே, மிகப்பெரிய சொத்து.
- சுவர்ணா, மாணவியின் தாய்
எங்கள் பள்ளி மாணவி ஸ்ருஷ்டி முதல் பரிசு பெற்றிருப்பது, மாவட்டத்துக்கே பெருமையான விஷயம். அவரது கையெழுத்து மிக அழகாக இருப்பதே, அவருக்கு முதல் பரிசு கிடைக்க காரணம். சொல்ல வந்த கருத்துகளை, தெளிவாக கூறியுள்ளார். பள்ளி சார்பில் அவரை கவுரவிப்போம். வறுமையிலும் திறமையான மாணவியாக திகழ்கிறார்.
ஸ்ருஷ்டி தன் கனவை நனவாக்கி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, நாங்களும் துணை நிற்போம். எங்கள் பள்ளிக்கு கட்டுரை போட்டியில், மாநிலத்திலேயே முதல் பரிசு கிடைத்திருப்பது, இரண்டாவது முறையாகும். 2024ல் நடந்த காந்தி கட்டுரை போட்டியில், திவ்யா ஸ்ரீஷைல் என்ற மாணவி, முதலிடம் பெற்றிருந்தார்.
- கணபதி நாயக், பள்ளி தலைமை ஆசிரியர்
