UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 07:52 PM

– நமது நிருபர் –: அ ருகில் இருக்கும் கடைக்கு நடந்து செல்வதற்கே பலரும் சோம்பேறித்தனப்படும் இந்த காலத்தில், நம் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் நடந்து சென்றே சுற்றிப்பார்ப்பவர், உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த ஆகாஷ் சுக்லா, 23.
ஆம். இவர் நடந்தே, நம் நாட்டை சுற்றிப்பார்க்கிறார். 70 ஆயிரம் கி.மீ., நடந்தே செல்ல தீர்மானித்த இவர், கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி, உத்தர பிரதேசத்தில் தனது நடைபயணத்தை துவங்கினார்.
மஹாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழியாக நடந்தே வந்தார். தற்போது, கர்நாடக மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர், சிக்கமகளூருக்கு வந்துள்ளார். ஒரே ஒரு பேக் வைத்து கொண்டு, அதில் தேசிய கொடியுடன் மலைப்பிரதேசத்தில் நடந்து செல்கிறார்.
வழியில் வருவோரை நண்பர்களாக்கும் குணம் கொண்டவராக இவர் இருக்கிறார். இது, இவருக்கு பக்க பலமாக இருக்கிறது. இதுவரை, 8,000 கி.மீ., கடந்து உள்ளார். இன்னும், 62,000 கி.மீ., துாரத்தை, அடுத்த ஐந்தாண்டுகளில் நடக்க திட்டமிட்டு உள்ளார்.
தன், சாகச பயணம் குறித்து அவர் கூறியதாவது:
இது வெறும் நடைபயணம் கிடையாது. இதன் மூலம் நம் நாட்டின் பல இனம், மொழி, கலாசாரத்தை அறிய முற்படுகிறேன். இந்த பயணத்தில் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன். பலரும் என்னிடம் அன்பாக நடந்து கொள்கின்றனர். இது, மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த பயணம் எனக்கு நிறைய கற்றுத்தருகிறது. ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்கிறேன். தொடர்ந்து பயணிப்பேன். இலக்கை அடைவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
