/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் ரன்யா 'அப்பீல்'
/
ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் ரன்யா 'அப்பீல்'
ADDED : ஏப் 02, 2025 06:14 AM

பெங்களூரு : துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் ஜாமின் கேட்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கன்னட நடிகை ரன்யா ராவ், 33. துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கம் கடத்திய வழக்கில் கடந்த மாதம் 3ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு, பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றங்கள் ஜாமின் வழங்க மறுத்தன.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ரன்யா தரப்பில் அவரது வக்கீல் கிரண் ஜவளி நேற்று மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையில், ரன்யா தங்கம் கடத்தியதில் அவரது தந்தையான கூடுதல் டி.ஜி.பி., ராமசந்திர ராவுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரித்த கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் 27ம் தேதி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதுபற்றிய தகவல் நேற்று வெளியானது.
'ரன்யா தங்கம் கடத்தியதில் ராமசந்திர ராவுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால், விமான நிலையத்தில் தன் பெயரை பயன்படுத்தி, 'புரோட்டோகால்' சலுகை பெற்றது, ராமசந்திர ராவுக்கு நன்கு தெரிந்துள்ளது. ஆனாலும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. மகளுக்கு புரோட்டோகால் வசதி அளிக்கும்படி, அவர் எந்த பரிந்துரையும் செய்யவில்லை' என, அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் ரன்யா உடலில் மறைத்து வைத்து, தங்கம் கடத்தியதை பற்றி எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் ஆபாச கருத்தை கூறினார். ரன்யா உறவினர் அளித்த புகாரில், எத்னால் மீது பெங்களூரு ஐகிரவுண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் எத்னால் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதி பிரதீப்சிங் யெரூர் நேற்று விசாரித்தார். மனு மீதான அடுத்த விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை எத்னால் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

