/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் மறு ஜாதிவாரி கணக்கெடுப்பு... செப்., 22ல் துவக்கம்!; முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
/
கர்நாடகாவில் மறு ஜாதிவாரி கணக்கெடுப்பு... செப்., 22ல் துவக்கம்!; முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
கர்நாடகாவில் மறு ஜாதிவாரி கணக்கெடுப்பு... செப்., 22ல் துவக்கம்!; முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
கர்நாடகாவில் மறு ஜாதிவாரி கணக்கெடுப்பு... செப்., 22ல் துவக்கம்!; முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
ADDED : ஜூலை 24, 2025 04:34 AM

பெங்களூரு, ஜூலை 24- கர்நாடகாவில் மறு ஜாதிவாரி கணக்கெடுப்பை செப்டம்பர் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 7ம் தேதிக்குள் அதாவது 17 நாட்களில் முடிக்க, முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 'இந்த கணக்கெடுப்பில் எந்த தவறும் இருக்க கூடாது' என்றும், சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார். கர்நாடகாவில் கடந்த 2013 - 2018 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சியில், முதல் வராக இருந்த சித்தராமையா ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, கர்நாடக பிற்படுத்தப்பட்ட பிரிவு ஆணைய தலைவர் காந்தராஜ் தலைமையில், ஒரு ஆணையத்தை அமைத்தார். கணக்கெடுப்பு நடத்த அரசு 156 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இந்த ஆணையம் கணக்கெடுப்பு நடத்தி, கடந்த 2018ல் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணியில் குமாரசாமி முதல்வராக இருந்த போது, அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், குமாரசாமி அறிக்கையை வெளியிடவில்லை.
ஆட்சி மாற்றத்திற்கு பின், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், ஜாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள சில குளறுபடிகளை சரிசெய்ய, முன்னாள் எம்.பி., ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையில் ஆணையம் அமைத்தது.
ராஜினாமா இந்த ஆணையம், அறிக்கையில் உள்ள அம் சங்களை ஆராய்ந்து, குளறுபடிகளை சரிசெய்து கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி, சித்தராமையாவிடம் முழு அறிக்கையை தாக்கல் செய்தது.
மாநிலத்தில் முக்கிய ஜாதியினரான லிங்காயத், ஒக்கலிகர்களை விட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகளவில் வசிப்பதாக, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அறிக்கையை அமல்படுத்த லிங்காயத், ஒக்கலிகர் சமூகத்தில் இருந்து, கடும் எதிர்ப்பு கிளம்பியது.
காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,வும், அகில இந்திய வீரசைவ மகாசபை தலைவருமான சாமனுார் சிவசங்கரப்பா, அமைச்சர்கள் மல்லிகார்ஜுன், ஈஸ்வர் கன்ட்ரே, எம்.பி., பாட்டீல் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லிங்காயத் சமூகத்தின் சில மூத்த எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா மிரட்டலும் விடுத்தனர்.
துணை முதல்வர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்ட ஒக்கலிகர் சமூக தலைவர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினர்.
ராகுல் உத்தரவு மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம்; களத்திற்கு செல்லாமல், 'ஏசி' அறையில் இருந்தபடியே அதிகாரிகள் கணக்கெடுப்பு அறிக்கை தயாரித்தனர்' என்றும் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
கணக்கெடுப்பு அறிக்கையை, அமைச்சரவை முன்பு வைத்து விவாதித்த போது, அமைச்சர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு, சித்தராமையா கொண்டு சென்றார்.
இதையடுத்து, புதிதாக ஜா திவாரி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள சித்தராமையாவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.
இதை ஏற்று, புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று, முதல்வர் அறிவித்தார். இதற்கும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதுபற்றி அரசு அலட்டி கொள்ள வில்லை.
17 நாட்கள் இந்நிலையில் புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக, முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு காவேரி இல்லத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை செயலர் ஷாலினி, பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் சிவராஜ் தங்கடகி, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் மதுசூதன் நாயக், அரசின் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை, செப்டம்பர் 22ம் தேதி துவங்கி அக்டோபர் 7ம் தேதி, அதாவது 17 நாட்களில் முடிக்க வேண்டும் என்றும், அக்டோபர் இறுதிக்குள் அறிக்கையை, அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
ஜாதி பாகுபாடு இந்த ஆலோசனையில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
புதிய ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகளை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆணையம் உடனடியாக துவங்க வேண்டும். கணக்கெடுப்பு பணிக்கு 1.65 லட்சம் பேர் தேவைப்படுகின்றனர். கல்வி, பிற்படுத்தப்பட்டோர் உட்பட பல துறைகளின் அதிகாரிகள், ஊழியர்களுடன் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.
கடந்த முறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்த போது, சரியாக நடக்கவில்லை என்று பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டு வந்தது. இம்முறை அப் படி எதுவும் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கணக்கெடுப்பில் இருந்து எந்த சமூகத்தினரும் விடுபட கூடாது. ஜாதி பாகுபாட்டை ஒழிப்பதே, கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம்.
மொபைல் செயலி மக்களின் நிதி நிலைமை, அவர்களுக்கு சொந்த நிலம் உள்ளதா, கல்வி தகுதி என்ன என்பது உட்பட, அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கணக்கெடுப்பு, பட்ஜெட் தயாரிக்கவும் அடிப்படையாக இருக்கும். நாட்டிற்கே முன்மாதிரியாக கணக்கெடுப்பு இருக்க வேண்டும். காந்தராஜ் ஆணையம், 54 முறையான கேள்விகளுடன் கணக்கெடுப்பு நடத்தியது.
இம்முறை கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்கள், மொபைல் செயலியை பயன்படுத்தி கொள்ளுங்கள். இதுதொடர்பான அறிவிப்பை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிடும். தெலுங்கானாவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை, நாம் முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும். அறிவியல் பூர்வமாகவும், வெளிப்படை தன்மையு டன் இருக்க வேண்டும். கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்த, அனைத்து துறைகளின் ஒத்துழைப்பும் அவசியம்.
இவ்வாறு பேசினார்.