'பூணுால் அகற்றப்பட்ட விவகாரத்தில் மாணவர்கள் விரும்பினால் மறுதேர்வு'
'பூணுால் அகற்றப்பட்ட விவகாரத்தில் மாணவர்கள் விரும்பினால் மறுதேர்வு'
ADDED : ஏப் 30, 2026 11:57 PM

பெங்களூரு: சி.இ.டி., தேர்வு எழுத சென்ற போது, மாணவர்கள் பூணுால் அகற்றப்பட்ட விவகாரத்தில், பெற்றோர், மாணவர்கள் ஒப்பு கொண்டால் மறுதேர்வு நடத்தப்படும் என, உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் கூறி உள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 23, 24ம் தேதிகளில் சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு நடந்தது. முதல் நாள் தேர்வின் போது, பெங்களூரு மடிவாளா கிருபாநிதி கல்லுாரியில் தேர்வு எழுத சென்ற மூன்று மாணவர்கள், பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தேர்வு எழுதி சென்ற ஒரு மாணவர் என, நான்கு மாணவர்களின் பூணுாலை தேர்வு மைய ஊழியர்கள் அகற்றினர். கஷ்டமான மன நிலையில் தேர்வை எழுதி விட்டு வந்தனர்.
இதுபோல சிக்கபல்லாபூரில் பி.ஜி.எஸ்., கல்லுாரியில் தேர்வு எழுத சென்ற, முஸ்லிம் மாணவியின் ஹிஜாப்பை அகற்ற கூறி உள்ளனர்.
இதற்கு மாணவி மறுத்ததால் அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தேர்வு எழுதிய மாணவர்கள், சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
இதுகுறித்து உயர் கல்வி துறை அமைச்சர் சுதாகர் நேற்று கூறுகையில், ''சி.இ.டி., தேர்வு எழுத செல்லும் மாணவ - மாணவியரின் மத நம்பிக்கைக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று கூறியும், சில இடத்தில் தேர்வு மைய ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் சரியல்ல.
'' பாதிக்கப்பட்ட நான்கு மாணவர்கள், ஒரு மாணவி, அவர்களின் பெற்றோர் ஒப்பு கொண்டால், மறுதேர்வு நடத்தப்படும். அவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் கொடுப்பது சரியாக இருக்காது,'' என்றார்.
