குடோனில் பதுக்கிய ரூ.7 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
குடோனில் பதுக்கிய ரூ.7 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
ADDED : மார் 25, 2026 07:10 AM

மடிவாளா: ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்து, குடோனில் பதுக்கிய ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
பெங்களூரு சில்க் போர்டு பஸ் நிலையம் பகுதியில், செம்மரக்கட்டைகள் விற்பனை நடப்பதாக, மடிவாளா போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. பஸ் நிலையத்திற்கு சென்றனர். சந்தேகமான வகையில் சுற்றிய ஒருவரை பிடித்தனர்.
அவர் கையில் வைத்திருந்த பையை பார்த்த போது, செம்மரக்கட்டை துண்டு இருந்தது. போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது, ஆந்திராவின் கடப்பாவை சேர்ந்த ஷேக் பாபாஜன், 38 என்பதும், கடப்பாவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து, பெங்களூரில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின்படி, பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஷானுபோகனஹள்ளியில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 7.12 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 285 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
