ரீல்ஸ் மோகம்: ஆற்றில் குதித்த போது பாறையில் தலை மோதி வாலிபர் பலி
ரீல்ஸ் மோகம்: ஆற்றில் குதித்த போது பாறையில் தலை மோதி வாலிபர் பலி
ADDED : மார் 24, 2026 06:15 AM

ராய்ச்சூர்: ரீல்ஸ் மோகத்தால், ஆற்றில் குதித்த போது, ஆற்றில் இருந்த பாறையில் தலை மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனுார் தாலுகாவின் கங்கனா நகரை சேர்ந்தவர் அமன் கான், 22. கடந்த, 22ம் தேதி மதியம் தன் மூன்று நண்பர்களுடன் முக்குண்டா அருகேயுள்ள ஆற்றில் குளிக்க சென்றனர்.
ஆற்றில் குதிப்பதை ரீல்ஸ் எடுக்க அமன் கான் முடிவு செய்தார். அதன்படி, தன் மொபைல் போனை நண்பர்களிடம் கொடுத்து விட்டு, உயரமான பகுதியில் இருந்து ஆற்றில் அமன் கான் குதித்தார்.
அப்போது, ஆற்றுக்குள் இருந்த பாறையில், அவரது தலை மோதியதில் ரத்தம் வெளியேறியது. தலையில் பலமாக அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவரது நண்பர்கள், சிந்தனுார் கிராமப்புற போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரிக்கின்றனர்.
