ஆசிரியையை மிரட்டி பாலியல் பலாத்காரம் ஆசிரியர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
ஆசிரியையை மிரட்டி பாலியல் பலாத்காரம் ஆசிரியர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
ADDED : மார் 19, 2026 05:21 AM
பெங்களூரு: அரசு பள்ளியில் கவுரவ ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிரந்தர பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் பலாத்கார வழக்கை தள்ளுபடி செய்ய, கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஷிவமொகாவில் அரசு பள்ளியில் 2023ல் ஒரு பெண், கவுரவ ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். அங்கு நிரந்தர ஆசிரியராக பணியாற்றி வரும் லிங்கராஜு நாயக், 47, வலுக்கட்டாயமாக ஆசிரியையிடம் பேச்சு கொடுத்து வந்தார்.
சில மாதங்களுக்கு பின், தன் அலுவலகத்துக்கு வரும்படி ஆசிரியையை, லிங்கராஜு நாயக் அழைத்தார்.
அங்கு சென்ற அவரை, பாலியல் பலாத்காரம் செய்ததுடன், இவ்விஷயத்தை வெளியே சொன்னால், 'கள கல்வி அதிகாரியிடம் கூறி, உன்னை பணியில் இருந்து நீக்கிவிடுவேன்' என்று மிரட்டி உள்ளார்.
அத்துடன், ஆசிரியை மொபைல் போனில் இருந்து தனது மொபைல் போனுக்கு, நிர்வாண படத்தை வலுக்கட்டாயமாக அனுப்ப வைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தை காட்டியே, அவரை அலுவலகம், ஆசிரியை வீடு உட்பட பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும், இதை வெளியே கூறினால், மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் கிடைக்காது என்றும் அஞ்சிய ஆசிரியை, கணவரிடம் கூறவில்லை.
ஒரு கட்டத்தில் ஆசிரியரின் தொல்லை அதிகரிக்கவே, கணவரிடம் அனைத்து விஷயத்தையும் கூறினார்.
பின் கணவரின் அறிவுரையின்படி, லிங்கராஜு நாயக்கை, தன் வீட்டுக்கு வரும்படி ஆசிரியை அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து வீட்டுக்கு வந்த லிங்கராஜுவை, ஆசிரியையின் கணவரும், தம்பியும் எச்சரித்து அனுப்பினர்.
ஆனாலும், ஆசிரியைக்கு தொல்லை கொடுப்பதை லிங்கராஜு நாயக் நிறுத்தவில்லை.
இதையடுத்து, போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், லிங்கராஜு நாயக்கை கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் லிங்கராஜு நாயக், மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், அவர் கூறியதாவது:
வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ததில், இது சம்மதத்துடன் நடந்த பாலியல் வன்கொடுமை அல்ல. பலவந்தமாக இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையாகும்.
குற்றம் சாட்டப்பட்டவர், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, முதலில் நிர்வாண படங்களை பெற்று, பின், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார்.
இவ்விஷயம் வெளியே தெரிந்தால் வேலை போய்விடும், அவமானம் ஏற்படும் என தெரிந்தும், பாதிக்கப்பட்டவர் இடமிருந்து பாலியல் ஒத்துழைப்பை பெற முயன்றுள்ளார்.
இந்நிலையில் வழக்கை ரத்து செய்வது பொருத்தமற்றது. மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்வதுடன், முழு விசாரணையையும் அவர் எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
