எம்.எல்.ஏ.,க்கள் மீது விசாரணைக்கு அனுமதி அளிக்க மறுப்பதா? முடிவு எடுக்க கோரி சபாநாயகருக்கு ஐகோர்ட் உத்தரவு
எம்.எல்.ஏ.,க்கள் மீது விசாரணைக்கு அனுமதி அளிக்க மறுப்பதா? முடிவு எடுக்க கோரி சபாநாயகருக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 14, 2026 11:34 PM

பெங்களூரு: எம்.எல்.ஏ.,க்கள் மீது விசாரணைக்கு அனுமதி அளிக்க மறுத்த விவகாரத்தில், சரியான முடிவு எடுக்க கோரி, சபாநாயகருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோலார் தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சீனிவாஸ் கவுடா. இவர், 2018ல் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, 'பா.ஜ.,வில் இணைய, என்னிடம், 30 கோடி ரூபாய், 'டீலிங்' பேசப்பட்டது.
அதில் முன்பணமாக, 5 கோடி ரூபாயை என் வீட்டில் வந்து பா.ஜ., தலைவர்கள் வைத்தனர். குமாரசாமி கூறியதால் பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன்' என்றார்.
இதுதொடர்பாக, முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயண், எம்.எல்.ஏ.,க்கள் விஸ்வநாத், யோகேஸ்வர், முன்னாள் எம்.எல்.ஏ., சீனிவாஸ் கவுடா, தற்போதைய மத்தியமைச்சர் குமாரசாமி ஆகியோர் மீது, லோக் ஆயுக்தாவில் சமூக ஆர்வலர் ஆபிரகாம் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு செய்யப்படாததால், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், அவர் மனு செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ், 'மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்கு தொடர முதலில் சபாநாயகர் அனுமதி பெற வேண்டும்' என்று ஆபிரகாமுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, குமாரசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கும்படி, அப்போதைய சபாநாயகர் காகேரியிடம், ஆபிரகாம் கோரிக்கை வைத்தார்.
ஆனால், கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர், 'மக்கள் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட எனக்கு அதிகாரம் இல்லை' என்று கூறினார்.
இதனால், குமாரசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடும் படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தை, ஆபிரகாம் அணுகினார். அந்த மனுவை, நீதிபதி சுனில் தத் யாதவ் விசாரித்தார்.
மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், 'மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் போது, சபாநாயகர் அனுமதி பெறுவது கட்டாயமாக உள்ளது. இதனால், இந்த வழக்கில் சபாநாயகர் அலுவலகம் சரியான முடிவு எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
