/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நகைக்காக மூதாட்டி கொலை துாரத்து உறவினர் கைது
/
நகைக்காக மூதாட்டி கொலை துாரத்து உறவினர் கைது
ADDED : நவ 13, 2025 04:07 AM

துமகூரு: தனக்கு ஆதரவு காட்டிய மூதாட்டியை, நகைக்காக கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவின், தொட்டபானகெரே கிராமத்தில் வசித்தவர் புட்டீரம்மா, 86. இவரது மகன் வீரண்ணா திருமணமாகி, தன் குடும்பத்துடன் தனியாக வசிக்கிறார். புட்டீரம்மா தனியாக வசித்து வந்தார்.
அக்டோபர் 31ம் தேதி மாலை 6:00 மணியை தாண்டியும், புட்டீரம்மாவின் வீட்டில் விளக்கு போடவில்லை. காலையில் இருந்தே அவர் வெளியே வரவில்லை.
பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் பெண் ஒருவர், மூதாட்டியின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, சமையல் அறையில் அவர் இறந்து கிடப்பது தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கும், மூதாட்டியின் மகன் வீரண்ணாவுக்கும் தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த பட்டநாயகனஹள்ளி போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றினர். தாய் கொலையானது குறித்து, வீரண்ணா புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான ஸ்ரீதர், 30, அவ்வப்போது புட்டீரம்மா வீட்டுக்கு வந்து சென்றது தெரிந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரித்தபோது, நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
சம்பவத்தன்று காலை 9:00 மணி அளவில் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற ஸ்ரீதர், அவரது கழுத்தை நெரித்துக் கொன்று, 55 கிராம் இரட்டை வட செயினை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
அவரை நேற்று முன் தினம் கைது செய்த போலீசார், தங்க செயினை மீட்டனர். நகையை வங்கி ஒன்றில் அடமானம் வைத்து, 2 லட்ச ரூபாயை ஸ்ரீதர் பெற்றிருந்தார். இந்த பணத்தில் புதிய மொபைல் போன் வாங்கியுள்ளார். மிச்ச பணத்தை மது குடிக்க, சூதாட்டத்துடன், விலைமாதுகளுக்கு செலவிட்டது, விசாரணையில் தெரிந்தது.

