மாணவி இறப்பில் சந்தேகம் தாய் மீது உறவினர்கள் புகார்
மாணவி இறப்பில் சந்தேகம் தாய் மீது உறவினர்கள் புகார்
ADDED : ஏப் 11, 2026 11:47 PM
ஹெப்பால்: கல்லுாரி மாணவி ஒருவர், சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்தார். அவரை தாயே அடித்து கொலை செய்திருக்கலாம் என, உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
பெங்களூரு ஹெப்பாலின், மனோராயனபாளையாவில் வசித்தவர் தனுஸ்ரீ, 18. தனியார் கல்லுாரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படித்து வந்தார். இவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமானதால், தாய் ஆஷாவுடன் வசித்தார்.
ஆண்டு தேர்வில் தனுஸ்ரீ இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. தேர்வு முடிவு வெளியான ஏப்ரல், 9ம் தேதி, மதியம் 3:00 மணியளவில், இவர் துாக்கிட்ட நிலையில் இருந்தார். இதைக்கண்ட தாய் ஆஷா, அக்கம் பக்கத்தில் வசிக்கும் இளைஞர்களின் உதவியுடன் மகளின் உடலை கீழே இறக்கினார்.
ஹெப்பால் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசாரும் அங்கு வந்தனர். தனுஸ்ரீயின் இறப்பில் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 'தனுஸ்ரீ தற்கொலை செய்யும் அளவுக்கு கோழைத்தனமான பெண் அல்ல. அவரது உடலில் காயங்கள் உள்ளன.
'மதியம், 3:00 மணிக்கு சம்பவம் நடந்திருந்தும், இரவு, 10:00 மணிக்கு மேலாகியும், ஆஷா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மருத்துவமனைக்கு சென்ற பின், அங்கிருந்து போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.
'எட்டு மணி நேரம் அவர் மூடி வைத்தது ஏன். தனுஸ்ரீயின் தந்தை இறந்த பின், ஆஷாவுக்கு வேறு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதே விஷயமாக, வீட்டில் பலமுறை தகராறு நடந்தது. தாய் ஆஷாவே, மகளை அடித்துக் கொலை செய்து, துாக்கில் தொங்க விட்டிருக்க கூடும். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்' என, புகார் அளித்துள்ளனர்.
போலீசாரும் தனுஸ்ரீயின் உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அறிக்கை வந்த பின்னரே, கொலையா, தற்கொலையா என்பது தெரியும் என, போலீசார் கூறுகின்றனர்.
