/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சைபர் குற்றங்கள் குறித்து ஒருமணி நேரத்துக்குள் புகார்'
/
'சைபர் குற்றங்கள் குறித்து ஒருமணி நேரத்துக்குள் புகார்'
'சைபர் குற்றங்கள் குறித்து ஒருமணி நேரத்துக்குள் புகார்'
'சைபர் குற்றங்கள் குறித்து ஒருமணி நேரத்துக்குள் புகார்'
ADDED : நவ 01, 2025 11:14 PM
பெங்களூரு: சைபர் மோசடிக்கு ஆளானவர்களின் வசதிக்காக, 'தேசிய சைபர் உதவி எண்' துவங்கப்பட்டு, நான்கு ஆண்டுகளாகியும் பணம் பறிபோன ஒரு மணி நேரத்துக்குள், புகார் அளித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் சைபர் குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதுகுறித்து புகார் அளிக்க 2021ல், உதவி எண், '1930' துவக்கப்பட்டது.
முதலாம் ஆண்டு 7.08 சதவீதம் மக்கள், சைபர் மோசடிக்கு ஆளானது குறித்து, புகார் அளித்தனர். 2023ல் இந்த எண்ணிக்கை 11.7 சதவீதமாக அதிகரித்தது.
ஆனால் 2024ம் ஆண்டு 9.43 சதவீதம் பேர் மட்டுமே, உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்துக்குள் புகார் அளிக்காத காரணத்தால் மோசடிக்கு ஆளானவர்களின் பணத்தை மீட்டுத்தர முடியவில்லை.
பணம் பறிபோன ஒரு மணி நேரத்துக்குள் புகார் அளித்தால், பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை, வங்கிக் கணக்குகளிலேயே முடக்கி வைக்க முடியும்.
டிஜிட்டல் அரெஸ்ட், முதலீடு 'லிங்க்'களை 'கிளிக்' செய்தோ அல்லது அறிமுகம் இல்லாதவர்களிடம் ஓ.டி.பி., எண்ணை தெரிவித்து பணத்தை இழந்தவர்கள், உடனடியாக புகார் அளிப்பது இல்லை.
பயம் காரணமாக சைபர் உதவி எண்ணிலோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்கவோ தயங்குகின்றனர்.
சிக்கபல்லாபூர் எம்.பி., சுதாகரின் மனைவி ப்ரீத்தியிடம், சைபர் குற்றவாளிகள் 'டிஜிட்டல் அரெஸ்ட்' பெயரில், 14 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்தனர். மோசடி நடந்த ஒரு மணி நேரத்துக்குள், அவர் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்ததால் விரைந்து விசாரணை நடத்தி, பணத்தை முடக்க முடிந்தது. அதன்பின் அந்த தொகை அவரது கணக்குக்கு மாற்றப்பட்டது.
நடப்பாண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் சைபர் குற்றவாளிகளிடம் சிக்கி, பணத்தை பறிகொடுத்தனர். ஆனால் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு, உதவி கேட்டவர்கள் 14.36 சதவீதம் மட்டுமே. மோசடிக்கு ஆளானவர்கள் தயங்காமல் புகார் அளிக்க வேண்டியது அவசியம்.
தாமதித்தால், அவர்களின் பணத்தை மீட்பது கஷ்டம். மோசடி செய்த பணத்தை சைபர் குற்றவாளிகள், வேறு கணக்குகளில் மாற்றி, எடுத்துக் கொள்வர். அதை கண்டுபிடிப்பது கஷ்டம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

